வேலூர் சிறையில் முருகன் உணவுத் தவிர்ப்பு போராட்டம்

11.09.2022 10:40:54

தமிழ் நாட்டின் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை குற்றவாளியான முருகன் தொடர்ந்து 4 ஆவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தன் மீதான வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யக் கோரியே முருகன் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறைவிடுப்பு கோரிக்கை

இதே வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில், முருகனின் மனைவி நளினிக்கு சிறைவிடுப்பு வழங்கப்பட்டு அவர் உறவினர் வீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தங்கியுள்ளார்.

இந்த நிலையில் தமக்கும் சிறைவிடுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் முருகன் மனு அளித்த போதிலும் அவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்திருந்தது.

இதன் பின்னணியில் தமக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்த முருகன், திடீரென உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

உணவை ஏற்க மறுப்பு

சிறை நிர்வாகம் வழங்கிய உணவை ஏற்க மறுத்து தொடர்ந்து, 4வது நாளாக இன்றும் அவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் முருகனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.