மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் கொரோனாவால் மரணம்!
மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் முபீதா உஸ்மான் (வயது 74) கொரோனாத் தொற்றால் காலமானார்.
திடீரெனெ நோய் வாய்ப்பட்ட அவர், சாய்ந்தமருது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது எனக் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும் சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட முபீதா உஸ்மான், 55 வருடங்களுக்கு மேலாக கலை, இலக்கிய, ஊடகத்துறை மற்றும் சமூகப் பணிகளில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்துள்ளார்.
இலங்கையில் மூத்த முஸ்லிம் பெண் பத்திரிகையாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள அவர், தினபதி, சிந்தாமனி பத்திரிகைகளில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியிருப்பதுடன், அரச தகவல் திணைக்களத்தில் பிரசார உத்தியோகத்தராகவும் பத்திரிகை தொடர்பு உத்தியோகத்தராகவும் பல வருடங்கள் கடமையாற்றியுள்ளார்.