ஜி.எஸ்.பி பிளஸ் !

17.04.2025 08:13:42

ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படும் பட்சத்தில், ஏற்கனவே அமெரிக்காவின் புதிய வர்த்தகக்கொள்கை மற்றும் அதன்கீழான தீர்வை வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பின்னடைவைச் சந்திக்கும் என பொருளியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இச்சலுகையைத் தொடர்ந்து பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆட்சியியல் நிர்வாகம் என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பான 27 சர்வதேச பிரகடனங்களுக்கு அமைவாக செயற்படவேண்டும்.

அதன்படி கடந்த 2022 - 2024 வரையான காலப்பகுதியில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்கு இலங்கையினால் இணங்கப்பட்ட கடப்பாடுகள் உரியவாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றனவா என்பது குறித்து மதிப்பீடு செய்வதற்காக இவ்வாரமளவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதிகளின் மதிப்பீட்டை அடுத்து இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீடிக்கப்படாவிடின், நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பாதிக்கப்படும் என பொருளியலாளர்கள் எதிர்வுகூறியுள்ளனர்.

'ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் உற்பத்திகளுக்கான, குறிப்பாக ஆடை உற்பத்திகளுக்கான மிகப்பரந்துபட்ட ஏற்றுமதி சந்தையாகும். எனவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்படுமேயானால், ஏற்கனவே அமெரிக்காவின் புதிய வர்த்தகக்கொள்கை மற்றும் அதன்கீழான தீர்வை வரி விதிப்பினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாட்டின் ஆடை உற்பத்தித்துறை மேலும் பின்னடைவைச் சந்திக்கும்' என பொருளியலாளரும், 'அறுத ரிசேர்ச்' அமைப்பின் பணிப்பாளருமான ரெஹான தௌஃபீக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையின் மூலம் வரியின்றி இலங்கையின் உற்பத்திகளை ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.