போலந்து தடகளம் தமிழகத்தின் சமீகாவுக்கு அனுமதி

17.08.2021 08:32:31

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் 3 நாட்கள் அலைக்கழிக்கபட்ட தமிழக மாற்றுத்திறனாளி வீராங்கனை சமீகா பர்வீன், போலந்து தடகள போட்டியில் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) அனுமதி வழங்கியுள்ளது. செவித்திறன் குறைபாடு உடையோருக்கான சர்வதேச தடகள போட்டி போலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது (ஆக. 23-28). இதற்கான தகுதிச்சுற்றில் பங்கேற்ற கன்னியாகுமரியை சேர்ந்த சமீகா பர்வீன் அபாரமாக செயல்பட்டு அசத்தினார்.

எனினும், போலந்து செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தகுதிச் சுற்றில் திறமையை நிரூபித்த சமீகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து சனிக்கிழமை டெல்லி வந்த சமீகா பர்வீன், அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் நேற்று மாலை ‘சாய்’ அதிகாரிகளை சந்தித்தனர்.  இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சமீகா பர்வீன், அவரது தாயார் கூறுகையில், ‘நீதிமன்ற உத்தரவுடன் டெல்லி வந்த எங்களுக்கு 3 நாள் அலைக்கழிப்புக்கு பின்போலந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

எங்கள் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது. நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தமிழக அரசு சிறப்பு பயிற்சியாளரை நியமனம் செய்ய வேண்டும். போலந்து செல்லும் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.