அசாத் சாலி வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை

02.12.2021 16:44:54

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்துள்ளது.

மதக் குழுக்களுக்கு இடையில் பகைமையை தூண்டிய குற்றச்சாட்டில் 8 மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து இவ்வாறு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இனங்கள் அல்லது மதங்களின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், மக்கள் மத்தியில் கோபத்தை தூண்டும் வகையிலும் இதுபோன்ற கருத்துகளை பிரதிவாதி கூறியதாக முறைப்பாட்டாளர்கள் நிரூபிக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டே அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் அவரை விடுவிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளாா்.

அதேவேளை அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இன்று (02) அழைப்பாணை விடுத்துள்ளாா்

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான மொஹமட் முஸம்மில், நிமல் பியதிஸ்ஸ மற்றும் ஜயனந்த வெல்லபட ஆகியோருக்கதிராகவே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.