இந்தியாவின் பல மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இந்தியாவின் கிழக்கு கடற்கரையோரத்தில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு தேசிய வானிலை ஆய்வு மையம் (IMD) பலத்த காற்று மற்றும் மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மோந்தா (Montha) என்று பெயரிடப்பட்ட இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது ஒரு சூறாவளி புயலாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அது கடற்கரையை நெருங்கிச் செல்லும்போது ‘கடுமையான சூறாவளி புயலாக’ தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து, ஒடிசா, மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு கனமழை பெய்யும் என்று IMD எச்சரித்துள்ளது.
ஓக்டோபர் 28 ஆம் திகதிக்குள், மொந்தா தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் அருகிலுள்ள மாநிலங்கள் அவசரகால மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தப்பட்டுள்ளன.
கனமழை எச்சரிக்கைகள் காரணமாக, ஆந்திரப் பிரதேசத்திலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் விசாகப்பட்டினம், அனகப்பள்ளி மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் நெருங்கி வருவதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
‘மோந்தா’ புயல், அதிகபட்சமாக மணிக்கு 90-100 கிமீ வேகத்தில் கடக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்தால், ஒக்டோபர் 28 மாலை/இரவு ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றிரவு இரவு 11.30 மணியளவில், புயல் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 640 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவிற்கு தென்கிழக்கில் 710 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 740 கிமீ தொலைவிலும், கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 860 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், புயல் கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 16 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 600 கிமீ தொலைவிலும், காக்கிநாடாவிற்கு தென்கிழக்கில் 680 கிமீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தென்கிழக்கில் 710 கிமீ தொலைவிலும், போர்ட் பிளேருக்கு மேற்கே 790 கிமீ மேற்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே 850 கிமீ தொலைவிலும் மையம் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.