’ஏப்ரல் 15 இல் எண்ணெய் தேய்த்தல் விழா’

05.04.2024 08:03:08

தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் சுப நிகழ்வுகளில் ஒன்றான தலைக்கு எண்ணெய் தேய்த்தல் தேசிய விழா ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு நடைபெறவுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி இதனைத் தெரிவித்தார். 

அத்துடன், தமிழ், சிங்களப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் இறுதி சுபச் சடங்குகளான மரங்களை நடும் நிகழ்வு ஏப்ரல் 18ஆம் திகதியன்று சுதேச மருத்துவ அமைச்சினால் ‘முருங்கை தினம்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

புத்தாண்டு கொண்டாட்டங்களின் தனித்துவமான சுப சடங்குகளான எண்ணெய் தேய்த்தல் தேசிய விழாவை ஏப்ரல் 15 ஆம் திகதி காலை 10.17 க்கு வத்தளை ஹெந்தல புராண ரஜமஹா விகாரையில் நடத்த சுதேச வைத்திய அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

மேலும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி சுபச் சடங்கு, மரக்கன்றுகள் நடும் நிகழ்வு, ஏப்ரல் 18 ஆம் திகதி நடைபெறும். சுதேச வைத்திய அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளது. அன்றைய தினம், அனைத்து மக்களையும் தங்கள் தோட்டத்தில், அதீத சத்துள்ள, அதிக மருத்துவ குணம் கொண்ட முருங்கை செடியை நடுகைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்