விண்வெளி பயணத்தால் மனிதர்களின் எலும்புகளில் பாதிப்பு ஏற்படுமா?
மனிதர்களின் உடலானது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. அதே சமயம் மனிதர்கள் பூமியின் ஈர்ப்பு விசையை தாண்டி விண்வெளிக்குச் சென்று திரும்பும் அளவிற்கு விஞ்ஞானத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விண்வெளி பயணம் மேற்கொள்பவர்கள் அதற்கேற்றவாறு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மனித வரலாற்றில் முதல் முறையாக கடந்த 1961 ஆண்டு ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி கேகரின் விண்வெளிக்குச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து 1969 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்க், நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார். இதன் பிறகு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் மாதக்கணக்காக தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு பல நாட்கள் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இருந்துவிட்டு அவர்கள் பூமிக்கு மீண்டும் திரும்பும் போது, அவர்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள், எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனடா நாட்டைச் சேர்ந்த கல்கேரி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று திரும்பிய 17 விண்வெளி வீரர்களிடம்(14 ஆண்கள், 3 பெண்கள்) இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் சராசரியாக 4 முதல் 7 மாதங்கள் வரை விண்வெளியில் இருந்துள்ளனர். பூமிக்கு திரும்பிய பிறகு சுமார் ஒரு வருடத்திற்கு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் போது விண்வெளி சென்று திரும்பிய வீரர்களின் கால்களில் உள்ள 'டிபியா' என்ற எலும்பில் 2.1% அளவிற்கு தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும், எலும்புகளின் உறுதித்தன்மை 1.3% அளவு குறைந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும் ஒரு வருடத்தில் 8 விண்வெளி வீரர்களின் எலும்புகள் பழைய நிலைக்கு திரும்பியதாகவும், 9 பேரின் எலும்புகள் நிரந்தர பாதிப்பை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியில் சராசரியாக 20 வருடங்களில் ஏற்படும் எலும்பு பாதிப்பு, விண்வெளியில் 6 மாதங்களில் ஏற்படுவதாக ஆய்வாளர் லேய்க் கேபல் தெரிவித்துள்ளார். இருப்பினும் இதில் பாதி பேருக்கு அந்த பாதிப்பு குணமடைந்து விடுகிறது என்றும், மற்றவர்களின் எலும்புகளில் அது நிரந்தர பாதிப்பாக மாறி விடுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சாதாரணமாக பூமியில் நமது எடையை தாங்கி நிற்கும் கால் எலும்புகள், விண்வெளியில் எடை அற்ற சூழலில் இருக்கும் போது இத்தகைய பாதிப்புகளை அடைகிறது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சத்தான உணவு, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இதனை சரிசெய்ய முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர். நாசா, இஸ்ரோ உள்ளிட்ட பல்வேறு விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இத்தகையை சூழலில் இந்த ஆய்வு முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.