நடிகர் ரோபோ சங்கரின் முதலாமாண்டு நினைவு நாள்.
தனது தனித்துவமான உடல்மொழி, அதிரடி நகைச்சுவை மற்றும் ரோபோ நடன அசைவுகளால் தமிழக மக்களைக் கட்டிப்போட்ட பிரபல நடிகர் ரோபோ சங்கரின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. மேடை நிகழ்ச்சிகள், சின்னத்திரை, வெள்ளித்திரை எனத் தொட்ட துறைகளிலெல்லாம் முத்திரை பதித்த ஒரு கலைஞனின் நினைவுகளைத் திரையுலகமும் ரசிகர்களும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
Ernstige gewrichtspijn? Doe dit zodra u wakker wordt
மதுரையில் எளிய மேடைக் கலைஞராக மிமிக்ரி மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் தனது கலைப் பயணத்தைத் தொடங்கியவர் சங்கர். விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது அசாத்திய நகைச்சுவையாலும், பாடி லாங்குவேஜாலும் ரோபோ சங்கர் என்ற பெயருடன் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அது இது எது? நிகழ்ச்சியின் 'சிரிச்சா போச்சு' சுற்றில் அவர் செய்த சேட்டைகளும், நடுவராகப் பங்கேற்ற 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' போன்ற நிகழ்ச்சிகளும் சின்னத்திரை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவை.
சின்னத்திரையில் பெற்ற அபார வரவேற்பைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் கால் பதித்தார். இயக்குநர் கோகுலின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வாயை மூடி பேசவும்', 'சிங்கம் 3', 'வேலைக்காரன்' எனப் பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.
தனுஷுடன் நடித்த மாரி படத்தில் சனிக்கிழமை கதாபாத்திரத்தில் தனது கவுண்ட்டர் காமெடிகளால் திரையரங்குகளை அதிர வைத்தார். வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியுடன் இணைந்து அவர் செய்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரிட்.
வெள்ளித்திரையில் உச்சத்தில் இருந்த சமயத்தில், மஞ்சள் காமாலை மற்றும் தீவிர உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டார். பின்னர் கடுமையான இரைப்பை-குடல் ரத்தக்கசிவு மற்றும் பல உறுப்பு செயலிழப்பு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி, தனது 46-வது வயதில் கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று அவர் காலமானார்.
தனது சிரிப்பால் பல லட்சம் மக்களின் மன அழுத்தத்தைப் போக்கிய ரோபோ சங்கர் மறைந்து ஓராண்டு ஆனாலும், அவர் விட்டுச் சென்ற நகைச்சுவைக் காட்சிகளும் அவரது நினைவுகளும் எப்போதுமே தமிழ் ரசிகர்களின் இதயங்களில் நிலைத்திருக்கும்.
