
மேற்கு வங்க வன்முறை.
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வெடித்த வன்முறையின் சில நாட்களின் பின்னர் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குடிமக்கள் அமைதியையும் ஒற்றுமையையும் பேணுமாறு வலியுறுத்தி ஒரு பொது வேண்டுகோளை நேற்றைய தினம் விடுத்தார்.
அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அமைதியின்மையைத் தூண்டுவதற்காக, பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் அதன் துணை அமைப்புகளான RSS உட்பட, இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில குழுக்கள் “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தின் பின்னணியைப் பயன்படுத்தி” ஒரு பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அந்த அறிக்கையில் மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய முதலமைச்சர்,வகுப்புவாத கலவரங்களை கண்டிப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கலவரங்களுக்குப் பின்னால் உள்ள குற்றவாளிகள் கடுமையாகக் கையாளப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், பரஸ்பர அவநம்பிக்கையைத் தவிர்க்க வேண்டும் என்றும் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களினால் ஏப்ரல் 11 அன்று வெடித்த முர்ஷிதாபாத் வன்முறையைத் தொடர்ந்து முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்த வன்முறையினால் மூன்று பேர் உயிரிழந்தும், பலர் காயமடைந்தும் உள்ளதுடன், விரிவான சொத்து சேதமும் ஏற்பட்டுள்ளது.
அதேநேரம் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்ததுள்ளனர். அவர்களில் சிலர் ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்ததுடன், ஏனையவர்கள் மால்டாவில் உள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.