ரஷ்யாவில் 2 தீவிரவாதிகள் சுட்டுகொலை

12.04.2024 07:25:03

மாஸ்கோ: ரஷ்யாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த சதி செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை ரஷ்ய படையினர் சுட்டு கொன்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த மாதம் 22ம் தேதி புகுந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 137 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்ப முயன்ற 4 பேரை ரஷ்ய போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் தஜிகிஸ்தானை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்துக்கு பின்னர், அந்த நாட்டில் உள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,கபர்டினோ-பல்காரியா மாகாணத் தலைநகர் நல்சிக் என்ற இடத்தில் தீவிரவாத சதியில் ஈடுபட முயன்ற 2 பேரை ரஷ்ய சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டு கொன்றனர்.

இதுகுறித்து தேசிய தீவிரவாத எதிர்ப்பு கமிட்டி கூறுகையில்,‘‘சிறப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளது. கபர்டினோ பல்காரியா மாகாணத்தில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத செயல்கள் அதிகரித்து வருகிறது.