விஜய் அரசுக்கு மீனவர்கள் எச்சரிக்கை!

16.09.2026 12:07:00

புதிய தலைமை செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்டும் முடிவை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஒரு செங்கல்லை நட்டு வைத்தாலும் கூட மிக பெரியளவில் போராட்டம் நடத்துவோம் எனவும் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போதுள்ள தலைமை செயலகத்தில் கடும் இடப்பற்றாக்குறை இருப்பதாக நீண்ட காலமாகவே புகார் இருக்கிறது. இதன் காரணமாக புதிய தலைமை செயலகம் அமைக்க ஏற்கனவே பல முயற்சிகள் நடந்தன. இருப்பினும், சில காரணங்களால் அது அமையவில்லை.

  

 

இதற்கிடையே நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் புதிய தலைமை செயலகம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். Also Read தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு.. படகு, கொடிக்கம்பங்களில் இருந்து தவெக கொடியை கழற்றி வீசிய மீனவர்கள் எதிர்ப்பு பிறகு இந்த தலைமை செயலகம் பட்டினப்பாக்கத்தில் அமையும் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணை வெளியான முதலே பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதே அவர்கள் கருத்து. புதிய தலைமை செயலகத்தை ஆதரிக்கும் பலரும் கூட வேறு இடத்தில் அதை கட்டலாம் என்கிறார்கள். தவெக கூட்டணி கட்சியினரே பட்டினப்பாக்கம் வேண்டாம் என்றே சொல்கிறார்கள்.

மீனவர்கள் இது விவாதமாக மாறியுள்ள நிலையில், 9 மீனவ கிராமங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்கிடையே தங்கள் கோரிக்கையை ஏற்று புதிய தலைமை செயலகத்திற்கான அரசாணையை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஒருவேளை ரத்து செய்யாவிட்டால் மிக பெரியளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் இதற்காக ஒரு செங்கல்லை நட்டு வைத்தாலும் அதற்கு கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் மேலும், "இந்த பகுதியில் சட்டசபை அமைந்தால்.. இந்த பகுதியே பாதுகாப்பு மண்டலமாக மாறிவிடும். அப்படி பாதுகாப்பு பகுதியாக மாற்றப்பட்டால், எங்கள் மக்கள் யாரும் கடலில் மீன் பிடிக்கப் போக முடியாது. மீன் வியாபாரமும் செய்ய முடியாது. எங்களுடைய வாழ்வாதாரமும் தொழிலும் முற்றிலும் நசுக்கப்படும். அதேபோல் இந்த ஏகப்பட்ட பள்ளிகள் உள்ளன. சாந்தோம் பகுதி ஒரு பள்ளி மண்டலமாகவே இருக்கிறது. இங்குள்ள மக்கள் மற்றும் குழந்தைகள் அந்த வழியாக தான் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். இது எங்கள் மக்களுக்கு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 20,000 பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கும். முதலமைச்சருக்கு ஒரு சிறிய கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தேர்தலில் வாக்கு கேட்கும்போது 'குட்டீஸ்... குட்டீஸ்...' என்று உருகினாரே, அந்த 'குட்டீஸ்'களின் வாழ்க்கையை தான் இப்போது கெடுக்க போகிறார் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் வெளிநாட்டிலிருந்து 14ஆம் தேதி திரும்பிய பிறகு, அவருடைய பதிலுக்காகவும் அறிவிப்புக்காகவும் நாங்கள் காத்திருக்கிறோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக இங்கு சட்டசபை அமைக்கும் அரசாணையை ரத்து செய்துவிட்டால், அவருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். ஒரு செங்கல்லை வைத்தாலும்! ஒருவேளை அதை செய்யாத பட்சத்தில், அவருக்காக இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்கள் காத்திருப்போம். அதற்கும் அவர் செவிசாய்க்காமல், அந்த சட்டசபை அமைக்கும் பணியில் ஒரு செங்கலை நட்டு வைத்தாலும் அதற்கான கடும் விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்து கொள்கிறோம். அடுத்தகட்ட போராட்டமாக ஒட்டுமொத்தத் தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரியில் உள்ள அனைத்து மீனவ கிராமங்களையும் ஒருங்கிணைத்து மிக பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்" என்றார்.