அதிமுகவுக்கு முன் தொகுதி பங்கீட்டை முடித்த திமுக!

05.03.2026 15:06:15

திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டை முடிப்பதற்கு முன், அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு வந்தார். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாகவே திமுக - காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டை முதல்வர் ஸ்டாலின் நிறைவு செய்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் இடையிலான கூட்டணி தொடருமா என்ற விவாதம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வந்தது. பிரவீன் சக்ரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு என்று பேசி வந்த சூழலில், சுமார் 41 தொகுதிகள் வரை காங்கிரஸ் தலைமை எதிர்பார்த்தது.

அதற்கேற்ப கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அக்கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டனர். குறிப்பாக கிரிஷ் சோடங்கர் திமுகவின் ஆஃபர் எதையும் ஏற்கும் மனநிலையிலேயே இல்லை. இதன்பின் திமுக தரப்பில் கனிமொழி மூலமாக டெல்லி தலைமையுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போதே திமுகவின் நிலை என்ன என்பதை கனிமொழி கூறிவிட்டார். இருப்பினும் காங்கிரஸ் தலைமை 41 தொகுதிகள் என்பதில் இருந்து இறங்கி வரவில்லை.

இதையடுத்து திமுக தலைமை காங்கிரஸ் கட்சிக்கு இதுதான் பங்கீடு செய்ய முடியும். இதன்பின் உங்கள் முடிவு என்ன என்பதை எடுத்து கொள்ளுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேரடியாக கூறியுள்ளார். அதன்பின்னரே ப.சிதம்பரம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, கனிமொழி - சோனியா காந்தி இடையிலான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இறுதியாக இன்று 28 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா என்று கணக்கில் திமுக - காங்கிரஸ் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.

இதனால் திமுக தலைமையும் உற்சாகமாக இருக்கிறது. ஏனென்றால் ஜனவரி மாதத்தின் இறுதியிலேயே அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இருப்பினும் தொகுதி பங்கீட்டை இன்னும் முடிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இருப்பினும் மார்ச் 6ஆம் தேதிக்குள் அதிமுக - பாஜக இடையிலான தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய ஆலோசிக்கப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் - திமுக இடையிலான கூட்டணி பங்கீட்டுக்கு முன், அதிமுக - பாஜக முடிக்க நினைத்தது. அப்படி செய்யும் பட்சத்தில், அதிமுக - பாஜக இணக்கமாக இருப்பதாக ஒரு பார்வையை உருவாக்க முடியும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பி இருந்தார்.

ஆனால் ராஜ்ய சபா வேட்பாளர்கள் அறிவிப்புக்கு முன்பாகவே காங்கிரஸ் உடனான தொகுதி பங்கீட்டை திமுக முடித்துவிட்டது. இதனால் திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இருப்பதோடு, 8 ஆண்டுகளாக திமுக தலைமை எந்தவொரு கட்சியையும் தங்களின் கூட்டணியில் இருந்து வெளியேறவிடாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக பக்கம் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகளும் கூட அதிமுக கூட்டணியில் இல்லை. புதிய தமிழகம் கட்சியோ இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. இதனால் ஸ்டாலின் அடித்து ஆடி வரும் சூழலில், எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.