இலங்கை இரண்டாவது தாய்நாடு!
|
சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக உள்ளது. இலங்கை மக்களின் அன்பை மறக்க முடியாது. இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் தெரிவித்தார் |
|
இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை வியாழக்கிழமை (23) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். தூதுவரை வரவேற்ற சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார். இலங்கைக்கு பல்வேறு துறைகளில் சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். இலங்கைக்கு சீனா வழங்கி வரும் அசைக்க முடியாத நட்பும் ஆதரவும் காரணமாக, கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் மதிப்பையும் அன்பையும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வென்றிருப்பதாகத் தெரிவித்தார். இலங்கைப் பாராளுமன்றத்தின் சார்பில், தூதுவரின் மதிப்புமிக்க சேவைக்கும் இலங்கை–சீனா உறவுகளை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்கும் சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேவேளை, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நெருக்கமான இருதரப்பு உறவுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ச்சியடையும் என நம்பிக்கை வெளியிட்டார். அரசாங்கம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பிலும் சபாநாயகர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கும், இனவாதம் அல்லது பாகுபாட்டிற்கு எந்தவித இடமும் இல்லாத வகையில் செயல்படுவதற்கும், அனைத்துப் பிரஜைகளையும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் நடத்துவதற்கும் அரசாங்கம் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இங்கு கருத்துத் தெரிவித்த சீனத் தூதுவர் கீ சென்ஹொங், தனது பதவிக்காலம் முழுவதும் தனக்கும் தூதரகத்திற்கும் வழங்கப்பட்ட ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் சபாநாயகருக்கும் இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் நன்றி தெரிவித்தார். சீனா இலங்கையின் நம்பிக்கைக்குரிய நட்புநாடு என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய தூதுவர்,எதிர்காலத்திலும் இலங்கையின் அபிவிருத்திக்கு தொடர்ந்து ஆதரவளிக்க சீனா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். இலங்கை மக்கள் தனக்கு வழங்கிய அன்பு, அக்கறை மற்றும் விருந்தோம்பலுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த அவர், இலங்கை எப்போதும் தனது இரண்டாவது தாய்நாடு போன்று இருக்கும் எனக் குறிப்பிட்டார். இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில், இலங்கை–சீனா இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. குறிப்பாக, இலங்கையின் போக்குவரத்துத் துறை மற்றும் நாட்டில் வளர்ந்து வரும் மின்சார வாகன சந்தை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் நிலையான அபிவிருத்தி முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவையும் சபாநாயகர் கோரினார். |