கடந்த ஆண்டு 9 கோடி ரூபாவிற்கு உணவு உட்கொண்ட அரசியல்வாதிகளும், அரச அதிகாரிகளும்

16.01.2022 05:37:20

பாராளுமன்றத்திற்கு சமூகமளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் உணவு மற்றும் குடிபானங்களுக்காக மாத்திரம் கடந்த ஆண்டு சுமார் 9 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி, லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் செயற்படுகின்ற குழுக்களுக்கு முன்னிலையில் சமூகமளிக்கும் அரச அதிகாரிகளுக்கும் பாராளுமன்றத்தினாலேயே உணவு விநியோகிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.

இதேவேளை, பாராளுமன்றத்தில் உணவு பொருட்களில் முன்னெடுக்கப்படுகின்ற மோசடிகள் மற்றும் வீண்விரயங்களை தவிர்ப்பதற்கு, பாராளுமன்ற செயலாளர் நாயகம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

இதன் ஒரு கட்டமாக, பாராளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பயண பொதிகள் எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரிசி, மரக்கறி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் உணவு சமைக்கும் நடவடிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது