
அல்ஜசீரா பேட்டி.
அல்ஜசீராவிற்கு வழங்கிய பேட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாதுகாத்ததாக தெரிவிக்கப்படுவதை மறுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பேட்டியின் இடைநடுவில் வெளியேறப்போவதாக எச்சரித்தார். |
அல்ஜசீராவின் இன்று ஒளிபரப்பாகவுள்ள ஹெட் டு ஹெட் பேட்டியில் கோத்தாபய ராஜபக்சவை தான் பாதுகாத்தார் என்ற குற்றச்சாட்டை ரணில்விக்கிரமசிங்க மறுத்துள்ளார். பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தனது அரசாங்கம் நம்பகதன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். பொதுமக்களின் போராட்டத்தை தொடர்ந்து நாட்டிலிருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பாதுகாப்பு அளித்தீர்களா என்ற கேள்விக்கு எனது நாட்டில் அரசியல்தொடர்பற்றவரான சட்டமாஅதிபரே வழக்குதாக்கல் செய்வது குறித்து தீர்மானிப்பார் எங்களால் அவருக்கு ஆதாரங்களை அனுப்பமுடியும் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பந்தலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார். 1980களின் பிற்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க ; அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பந்தலந்தவில் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதைகள் கொலைகள் இடம்பெற்றன என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையே அவர் நிராகரித்துள்ளார். அரசாங்க விசாரணை அறிக்கை பந்தலந்த வீடமைப்பு திட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கிய முக்கிய சூத்திரதாரி ரணில்விக்கிரமசிங்க என தெரிவித்திருந்ததுடன் அங்கு மீறல்கள் இடம்பெறுவது குறித்து குறைந்தபட்சம் அவருக்கு தெரிந்திருந்தது என குறிப்பிட்டுள்ளது. அல்ஜசீரா செய்தியாளர் தன்வசம் வைத்திருந்த அரசாங்க விசாரணை அறிக்கையின் நகல்வடிவத்தை காண்பித்து கேள்விஎழுப்பியவேளை முதலில் அவ்வாறான அறிக்கையொன்று உள்ளதையே மறுத்த ரணில்விக்கிரமசிங்க பின்னர் அந்தஅறிக்கை செல்லுபடித்தன்மை வாய்ந்ததா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எவையும் நிரூபிக்கப்படவில்லை என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |