கல்வி மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும்.

04.03.2026 14:00:00

கல்விதான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும் அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் நேற்று(03) நடைபெற்ற அகிலன் பவுண்டேசன் நிறுவனத்தினால் அக்கிராம மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2009 மே 18 இற்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களில் விவேகானந்தபுரம் கிராமமும் ஒன்றாகும். அதிலும் இக்கிராமம் மிகவும் முக்கியம் வாய்ந்த கிராமமாகும். இந்த கிராமத்தில் இருந்து விடுதலைக்காக போராடிய போராளிகள், மாவீரர்கள் ஆகுதியாகி இருக்கின்ற கிராமமாக கிராமமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் மண்ணுக்காகவும் மண் மீட்புக்காகவும்ண. அர்ப்பணித்த கிராமமாக இது காணப்படுகிறது.

 

விடுதலைப் புலிகள் மௌனித்ததன் பிற்பாடு 2010 ஆம் ஆண்டில் இருந்து இப்பகுதி இராணுவ கட்டுப்பாட்டின் பிரதேசமாகவும் காணப்பட்டு வருகின்றது. 2010 ஆம் ஆண்டிலிருந்து எதிர் பெறுகின்ற மே மாதம் 18 ஆம் திகதி வரைக்கும் நாங்கள் 7 வருடங்களை கடந்திருக்கின்றோம். இந்த 17 வருடங்களில் நாங்கள் அவதானிக்கின்ற விடயம் யாதெனில் ஏற்கனவே இருந்த ஒழுக்கம் நீதி நியாயம் அனைத்துமே இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

 

இந்தப் படுவாங்கரை பிரதேசத்தில் எம்மவரிடையே அன்று இருந்த ஒழுக்கம் என்பதும் இன்று இருக்கின்ற ஒழுக்கம் என்பதும் அறுந்து போயிருக்கின்றது. பல்வேறுபட்ட சீரழிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நமது மக்களை பல்வேறுபட்ட திசை மாற்றுகின்ற நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றனர். வடக்குக் கிழக்கைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் யுவதிகள் கடந்த கால போராட்டங்களை மறந்து இருக்கின்றோமா என்ற விடயங்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே 2010 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையான 17 வருடங்களுக்குள் நமது மக்களை நல்வழிபடுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளில்தான் அகிலன் பவுண்டேசன் எனும் நிறுவனமும் செயற்பட்டு வருகின்றது.

 

நமது மக்கள்  நிறுவனங்கள் வழங்குகின்ற உதவிகளை மாத்திரம் பெற்றுக் கொண்டு செல்பவர்களாக மாத்திரம் இருக்கக்கூடாது. மனரீதியாக, உளரீதியாக செயற்பாட்டு ரீதியாக நடவடிக்கை ரீதியாக மாற்றங்களை கொண்டுவர வேண்டும். உதவிகள் வருகின்றபோது அந்த உதவிகளைப் பெற்று அதன் பெறுபேறுகளை நாங்கள் அவர்களுக்கு காட்ட வேண்டும். அப்போதுதான் உதவி செய்கின்றவர்களின் மன மாற்றங்களும் ஏற்பட்டு ஏனைய கிராமங்களுக்கும் அவர்கள் உதவிகளை மேற்கொள்வார்கள்.

 

எனவே விவேகானந்தபுரம் கிராம மக்கள் அகிலன் பவுண்டேஷன் போன்ற நிறுவனத்தால் வழங்கப்படும் உதவிகளை பெற்று அவர்களது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கின்றார்கள் என தெரிய வருகின்றது. எனவே புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் அங்கும் அவர்கள் பல இன்னல்களை சந்தித்து உழைத்துதான் அதில் வருகின்ற ஒரு பகுதி பணத்தைதான் நமது மக்களின் வாழ்வாதாரத்துக்காக இங்கு அனுப்புகிறார்கள். அதற்குரிய பெறுபேறுளை நமது மக்கள் காண்பிக்க வேண்டும். கடும் குளிர், பனி அனைத்தையும் கடந்து எமது மக்களுக்கு அவர்கள் நிதி வழங்குகின்றார்கள் என்றால்; அவர்களுக்கு நாங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்து காட்ட வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

 

அதுபோல் மாணவர்களின் ஒழுக்கம் என்பது பெற்றோர்களில்தான் தங்கி இருக்கின்றது. பாடசாலைகளில் மாணவர்கள் குறைந்து ஆறு மணித்தியாலம்தான் பாடசாலையில் இருக்கின்றார்கள். ஏனைய மிகுதியாக உள்ள நேரம் அனைத்தும் பெற்றோர்களுடன் அல்லது வீட்டில்தான் மாணவர்கள் செலவிடுகின்றார்கள். எனவே கல்வி என்பதை ஒரு கருத்தாக எடுத்து எமது மாணவர்களை ஒழுக்க சீலர்களான கல்வியில் கற்பிக்க வேண்டும். கல்விதான் எம்மை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். கல்வியின் மூலமாகத்தான் நாம் விடுதலை பெற வேண்டும். நாம் அனைவரும் தமிழர்களாக இருக்க வேண்டும் அதற்காக தமிழ் தேசியத்திற்கு பின்னால் அனைவரும் இருக்க வேண்டும். தமிழ் தேசியத்தை நாம் அனைவரும் வளர்க்க வேண்டும். தமிழ் தேசியக் கட்சியில் இருக்கின்ற உறுதியானவர்களை நாங்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும். அவர்களை ஒரு பலமான சக்தியாக பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும.; தமிழ் தேசியத்தின் குரலாக அவர்களை மிளிரச் செய்ய வேண்டும். அதனை நாம் பலப்படுத்த வேண்டும். இவ்வாறான விடயங்களையும் நாங்கள் திசை மாறாமல் கருத்தில் கொள்ள வேண்டும். எங்கள் இனத்திற்காக நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என  மேலும்  தெரிவித்தார்.