ஐ.நா. எச்சரிக்கை.

08.08.2025 07:54:03

காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்துக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின் படி, ஹமாஸை முற்றிலும் தோற்கடிப்பது அல்லது கடத்தப்பட்டவர்களை மீட்பது தற்போதைய இராணுவ நடவடிக்கைகளால் சாத்தியமில்லையென அமைச்சரவையில் பெரும்பாலான அமைச்சர்கள் கருதினர். இதையடுத்து, காசா நகரை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தை முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, அமெரிக்கா மற்றும் சில மேற்கத்திய நாடுகள், இஸ்ரேலின் திட்டம் பிராந்தியத்தில் நடைபெற்று வரும் இராணுவ மோதல்களை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளன. இதே நேரத்தில், பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள், காசா நகரில் கடும் தாக்குதல்கள் நடைபெறுமானால், பொதுமக்கள் உயிரிழப்புகள் கணிசமாக அதிகரித்து, மனிதாபிமான நெருக்கடி கடுமையாகும் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலின்  திட்டம் ‘பேரழிவு விளைவுகளை’ ஏற்படுத்தக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையும்  (UN) , கடுமையாக எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்கள் தொடர்பான ஒருங்கிணைப்பாளர், முஹன்னத் ஹடி (Muhannad Hadi) கருத்துத் தெரிவிக்கையில் ” காசா நகரில் ஏற்கனவே உணவு, தண்ணீர், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கடுமையாக தட்டுப்பாடு நிலையில் உள்ளன.

 

இதற்கிடையில் இத்தகைய பெரிய அளவிலான இராணுவ நடவடிக்கை, ஆயிரக்கணக்கான பொதுமக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும்  எனத்  தெரிவித்துள்ளார்.