தமிழர்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களும் நீக்கப்படும் அபாயம்!

27.10.2025 15:45:13

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழர்களுக்கான குறைந்தபட்ச அதிகாரங்களும் நீக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கான அரசியல் தீர்வொன்றை முன்வைக்க ஆலோசித்துவரும் தேசிய மக்கள் சக்தி அரசின் மேலிடம், அப்படியான தீர்வை வழங்கும் பட்சத்தில் ஏற்கனவே தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிரும் ஏற்பாடுகளை கொண்ட மாகாண சபை முறைமையை முற்றாக நீக்கிவிடுவதற்கும் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மாகாண சபை முறைமையினை இந்தியா இங்கே பரிந்துரைந்துள்ளதாலும் மாகாண சபை முறைமையில் தொடர் ஈடுபாட்டை இந்தியா காட்டிவருவதாலும் அந்த முறைமை நீக்கம் குறித்து புதுடில்லிக்கு நேரடியாகவே விளக்கமளிக்க ஜே.வி.பியின் உயர்மட்ட பிரமுகர்கள் குழுவொன்று தயாராகி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே நீண்டகாலம் மாகாண சபைத் தேர்தல் நடக்காமல் மாகாண சபை முறைமை முடங்கியுள்ளதாலும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உத்தரவாதத்தை கொழும்பு வழங்குவதாலும் சிலசமயம் மாகாண முறைமை நீக்கத்துக்கு இந்தியா (தனது பிராந்திய பொருளாதார, பாதுகாப்பு நலன் கருதி) உடன்படுமாயின் தமிழர்களுக்குரிய குறைந்தபட்ச தீர்வும் அற்றுப்போகலாமென அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.