வழிகாட்டுதல்களை காவல் துறையினர் பின்பற்றுவது இல்லை” .

03.07.2025 09:25:13

நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர், போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சூழலில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரைச் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள மடப்புரம் அருகே உள்ள அவரது வீட்டில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அஜித்குமாரின் உருவப் படத்திற்கு மலை தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினார். அதோடு இந்த சம்பவம் குறித்து நடந்த சம்பவம் குறித்து அஜித்குமாரின் தம்பியான நவின்குமாரிடம் அஜித்குமாருக்கு என்ன நடந்தது? போன்ற விவரங்களை எல்லாம் முழுமையாகக் கேட்டு அறிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசுகையில், “இளைஞர் அஜித்குமாரை சித்திரவதை செய்து கொலை செய்து இருக்கிறார்கள் மிக வன்மையான கண்டனத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவிக்கிறது. தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது என்றாலும் இது ஆராத் துயரம்.

காவல் துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் புலன் விசாரணையில் இருப்பவர்கள் இதுபோல அடிக்கடி படுகொலை செய்யப்படுவது தொடர்கதையாக நீடிக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இந்த நிலைதான் உள்ளது. இதனை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதும் நமக்கு ஆறுதலை தருகிறது. இந்த புலன் விசாரணையை சிபிஐ விசாரிக்கட்டும் என்று அனுமதித்திருப்பது முதல்வரின் நேர்மையை உறுதிப்படுத்துகிறது.

அஜித்குமார் அவர்களின் தாயாரையும் அவருடைய உடன்பிறந்த தம்பி நவீன் குமார் அவர்களையும் இப்போது நாங்கள் நேரில் சந்தித்து நடந்த விவரங்களை கேட்டறிந்தோம். எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாத ஒரு வழக்கில் காவல்துறையினர் புலன் விசாரணையே தொடங்கக்கூடாது என்பது தான் சட்டம். ஒரு நபரை எந்த அடிப்படையில் புலன் விசாரணை என்கிற பெயரால் இந்த கொடூரத்தை அரங்கேற்றினார்கள் என்பது அதிர்ச்சி அளிக்கிறது. வழக்கமாக காவல் நிலையத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவின் ஆய்வாளர் முதலில் இந்த புகாரை பெற்றிருக்கிறார், சி.எஸ்.ஆர் தந்து இருக்கிறார். எந்த முகாந்திரமும் இல்லை என்பதனால் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார். பிறகு டி.எஸ்.பி. தலைமையிலான தனிப்படையினர் எந்த அடிப்படையிலே இந்த வழக்கை புலன் விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்கள். எப்.ஐ.ஆர். இல்லை இதுவே ஒரு அத்து மீறல்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கார்குண்டு, வி.ஆர். கிருஷ்ண ஐயர் போன்றவர்கள் காவல்துறையினரை குறித்துச் சொன்ன கருத்துக்கள் என்றைக்கும் உச்ச நீதிமன்ற ஆவணங்களில் அப்படியே பதிவாகி இருக்கின்றன. காவல்துறையினர் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ரவுடிகள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளே சொல்லியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தேசிய அளவிலே காவல்துறையினரின் அதிகார ஆணவம் என்பது அவ்வப்போது வெளிப்பட்டு இருக்கிறது. அவர்களை மனித உரிமை உணர்வு உள்ளவர்களாக விழிப்புணர்வு பெறச் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் தரப்பட்டிருக்கின்றன. அது மட்டும் இல்லாமல் ஒரு புலன் விசாரணையை காவல்துறையினர் எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு 11 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வரையறுத்து இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழிகாட்டுதல்களை எந்த காவல் துறையைச் சார்ந்த அதிகாரிகளும் பின்பற்றுவது இல்லை.