தமிழரசு நாடாளுமன்றக் குழு இந்தியத் தூதுவருடன் சந்திப்பு!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவினருக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றுள்ளது. |
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான தமிழரசின் நாடாளுமன்றக் குழுவுக்கும், இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும், தமிழரசுக் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அத்தகைய அரசியல் நகர்வுகளில் இந்தியாவின் வகிபங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்புக் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள சாணக்கியன், அரசியல் தீர்வு சம்மந்தமாக இந்தியா வலியுறுத்த வேண்டும் எனவும்; மாகாண சபைத் தேர்தல் உடன் உடன் நடாத்தப்பட வேண்டுமென்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் தமிழர் தேசத்தில் நடைபெறும் பிரச்சனைகளை ஆவணப்படுத்துவதற்கு தீர்மானமெடுக்கப்பட்டுள்ளது. இவ் ஆவணம் தயாரிக்கப்பட்டதன் பின்னர் இந்திய உயர் ஸ்தானிகரிடம் ஒப்படைப்பதாகவும் பேசப்பட்டது. மேலும் மக்களின் அபிவிருத்தி தொடர்பிலும், மீனவர்களின் பிரச்சினைகள் பற்றியும் இங்கு முக்கியமாக கலந்துரையாடப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். |