"உடனையே வெளியேறுங்கள்" -
சிரியாவில் மோசமடைந்து வரும் நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், மறு அறிவிப்பு வரும் வரை சிரியாவுக்கான அனைத்துப் பயணங்களையும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. சிரியா தொடர்பில் நள்ளிரவில் இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பால், மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவசர உதவி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகம், |
தற்போது சிரியாவில் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் சிரியாவில் இருந்து வெளியேற முடியும் என்பவர்கள் உடனடியாக, பயணிகள் விமானங்களைப் பயன்படுத்தவும், வெளியேற முடியாத சூழலில் இருப்பவர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கையைக் கடைப்பிடிக்கவும், தங்களின் செயல்பாடுகளை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்தவும் கோரிக்கை வைத்துள்ளனர். டமாஸ்கஸில் உள்ள இந்தியத் தூதரகத்துக்காகப் பகிரப்பட்ட அவசர உதவி எண். இது +963 993385973. இதே இலக்கத்தை வாட்ஸ்அப்பிலும் பயன்படுத்தலாம். மேலும், அவசர மின்னஞ்சல் முகவரியாக hoc.damascus@mea.gov.in என பகிர்ந்துள்ளனர். சிரியா தற்போது ஒரு அரசியல் நெருக்கடியின் மத்தியில் உள்ளது, ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவு பஷர் அல்-அசாத் ஆட்சி கிளர்ச்சிக் குழுக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அசாத் ஆட்சியை வெளியேற்றும் முடிவுடன் கடந்த ஒரு வாரமாக தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது கிளர்ச்சியாளர்கள் படை. மட்டுமின்றி, சிரியாவின் ஹோம்ஸ் நகரத்தை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களின் அடுத்த இலக்கு டமாஸ்கஸ் என்றே கூறப்படுகிறது. மேலும், ஒரு தோட்டாக்கள் கூட சுடப்படாமல் பல சிரியா நகரங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து கிளர்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளது. சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலெப்போ மற்றும் முக்கிய நகரமான ஹமா ஆகியவை ஏற்கனவே ஜனாதிபதி அசாத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வீழ்ந்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக அசாத் குடும்பமே சிரியாவை ஆண்டு வருகிறது. ஆனால் முதன்முறையாக, அது ஒரு முழுமையான வீழ்ச்சிக்கு உண்மையிலேயே தயாரான நிலையில் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. |