“பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது”.

28.04.2026 08:31:50

தமிழ்நாட்டில் கடந்த 23ஆம் தேதி (23.04.2026) சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக என நான்கு முனைப் போட்டி நிலவியது. இதற்கிடையே தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கடந்த 21ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெற்றோரிடம் குழந்தைகள், ‘சாக்லேட்டுக்கு அடம் பிடிப்பதைப் போல அடம் பிடித்து த.வெ.க.விற்கு வாக்களிக்கச் சொல்ல வேண்டும்.

 

ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோரை த.வெ.க.விற்கு வாக்களிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன் காரணமாகக் குழந்தைகள், தங்களது பெற்றோர்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்குத் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதில், “அரசியல் நோக்கங்களுக்காகக் குழந்தைகளைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. குழந்தைகள் அழுவது, பிடிவாதமாக நடப்பது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குழந்தைகள் மூலம் வாக்காளர்களைப் பாதிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது ஆகும். மேலும் இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் விஜய்க்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.