‘இந்திய – சீன எல்லைப் பிரச்சினை என்பது வரலாற்றை மிஞ்சிய விவகாரம் – வாங் யி

08.03.2021 08:55:06

‘இந்திய – சீன எல்லைப் பிரச்சினை என்பது வரலாற்றை மிஞ்சிய விவகாரம். அதுவே இரு நாடு உறவின் முழுக்கதையும் அல்ல என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் காங்கிரசின் வருடாந்திர நிகழ்வை ஒட்டி நடைபெற்ற காணொலி காட்சி வாயிலான பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “இரு தரப்பும் பிரச்சினைகளை முறையாக கையாளும் அதேநேரம் எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் விரிவுபடுத்துவதும் முக்கியம்.

பல முக்கியமான விஷயங்களில் இரு நாடுகளின் நிலைகளும் ஒரே மாதிரியானவை அல்லது அதற்கு நெருக்கமானவை. எனவே சீனாவும், இந்தியாவும் நண்பர்கள், பங்காளிகளே தவிர, எதிராளிகளோ, அச்சுறுத்தல்களோ அல்ல.

இரு தரப்பும் அடுத்தவர் வெற்றி பெற உதவ வேண்டுமே தவிர குறைத்து மதிப்பிடக்கூடாது. நாம் சந்தேகத்தை வளர்ப்பதற்கு பதிலாக  ஒத்துழைப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை உரையாடல் மூலம் தீர்வு காண்பதில் நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம். அதேவேளையில்  எங்களின் இறையாண்மை உரிமைகளைப் பாதுகாப்பதிலும் உறுதியாக உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.