
ஆப்ரேஷன் சிந்தூர்.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது இந்திய ராணுவம். பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: “மொத்தம் ஒன்பது பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. எங்கள் நடவடிக்கைகள் கவனமான முறையில் கணக்கிடப்பட்டு தீவிரமடையாமல் உள்ளன. எந்த பாகிஸ்தான் ராணுவ முகாம்களும் குறிவைக்கப்படவில்லை. இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது.
25 இந்தியர்களும் ஒரு நேபாள குடிமகனும் கொல்லப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பானவர்கள் விளைவுகளை எதிர்கொள்வார்கள் என்ற நாங்கள் உறுதியளிக்கிறோம். ‘ஆப்ரேஷன் சிந்தூர்‘ பற்றிய விரிவான விளக்கம் இன்று அளிக்கப்படும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோட்லி, பஹ்வல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் நகரைச் சுற்றியுள்ள மலைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் நள்ளிரவுக்குப் பிறகு பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பல்வேறு விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. லாகூர், சியால்கோடி விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் இந்தியாவின் ஏவுகணை தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர் என பாகிஸ்தான் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
இதேபோல் இந்தியாவின் மத்திய மந்திரிகளான ராஜ்நாத் சிங் கிரண் ரிஜிஜு உள்பட பலர் தங்களது எக்ஸ் வலைதளங்களில் ஜெய்ஹிந்த் என்ற வாசகங்களைப் பதிவிட்டுள்ளனர். கடந்த 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு தரப்பினரும் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை அறிந்திருப்பார்கள். ஆகையால் இது மேலும் அதிகரித்துவிடாத நிலை உருவாக வேண்டும். மேலும் இந்த அதிகரிப்பதைத் தடுக்க ஒரு பெரிய இராஜதந்திர உந்துதல் தேவை எனவும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்த யுத்தச்சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “ஒரு அவமானம்” என்று குறிப்பிட்டதுடன் “இது விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்” என்றும் தெரிவித்திருக்கிறார்.