பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

31.07.2026 08:04:34

தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை (29) ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 32 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 

மேலும் இந்த அனர்த்தத்தில், 10 பேர் நிலத்தடியில் சிக்கிக்கொண்டனர். 

மீட்புக் குழுவினர் அவர்களை அடைய விரைந்த நிலையில், அவர்களின் நிலைமை உயிருக்கு ஆபத்தானதாக இருப்பதாக அதிகாரிகள் கவலை கொண்டுள்ளனர்.

மீத்தேன் வாயு தேங்கியதே இந்த வெடிப்புக்குக் காரணமாக இருந்ததாகத் தெரிகிறது என்றும், பலூசிஸ்தான் மாகாணத் தலைநகரான குவெட்டாவின் புறநகர்ப் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் அரசு சுரங்க ஆய்வாளர் கனி பலோச் தெரிவித்தார்.

வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்து சில மணிநேரங்களுக்குப் பின்னர் ஏழு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், பின்னர் அவசரக்கால மீட்புக் குழுவினர் மேலும் 25 பேரின் உடல்களைக் கண்டெடுத்ததாகவும் அதிகாரிகளும் மாகாண பேரிடர் மேலாண்மை முகமையும் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன. 

இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனைய சுரங்கத் தொழிலாளர்களைக் கண்டறிந்து மீட்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.