தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை!
அண்மையில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச் செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த் தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டு விடவில்லை என தமிழ்த்தேசிய மக்கள் கூட்டணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
மாதத்துக்கொரு கேள்வி - பதில் பகுதியில் 'தமிழ்த்தேசியம் அழிந்துவிட்டதா? தேர்தல் முடிவுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?' என எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு அளித்திருக்கும் பதிலிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார். தமிழீழம் பெறமுடியாமல் போய்விடுமா என்று பிரபாகரனிடம் ஒருவர் கேட்டார். அதற்கு அவர் 'தமிழீழத்தைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. அது ஏற்கனவே இருக்கிறது. அதனைப் பாதுகாப்பதற்காகத் தான் நாங்கள் போராடுகின்றோம்' எனப் பதிலளித்தாராம். அதேபோன்று தமிழ்த்தேசம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கும் மனோநிலையே தமிழ்த்தேசியம். அது அழிந்துவிடவில்லை. தேர்தலின் பின்னர் தமிழ்த்தேசத் தெருக்கள் பலவற்றில் இராணுவத்தடைகள் நீக்கப்பட்டதைப் பார்த்திருப்பீர்கள். ஒரே நாட்டுக்குள் தமிழ் பேசும் பிரதேசங்களில் மாத்திரம் ஏன் இந்தப் பாகுபாடு எனும் அடிப்படையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்மொழி பேசும் பிரதேசங்கள் என்ற உண்மையை உணர்ந்து செயலாற்றுபவர்களை தமிழ்த்தேசியத்தை அழிப்பவர்கள் என்று அடையாளம் காட்டமுடியாது. தமிழ்த்தேசிய சிந்தனையை வைத்து வியாபாரம் நடத்தியவர்கள் தேர்தலில் காணாமல்போயிருக்கிறார்கள். தமிழ்த்தேசிய சிந்தனையை ஏளனம் செய்து, கட்சிகளைப் பிரித்து சுயநல அரசியல் நடத்திய ஒருவர் காணாமல் போயிருக்கிறார். இருப்பினும் நடைபெற்று முடிந்த தேர்தலில் வட , கிழக்கில் அரசாங்கம் ஆசனங்களைப் பெற்றிருப்பதே உங்களது கேள்விக்குக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவுகள் எமக்கு இறைவனால் தரப்பட்ட வரப்பிரசாதமாகும். கடந்த காலங்களில் தமிழ்த்தேசியத்தை ஆதரித்தவர்கள் இன்னமும் தமிழ்த்தேசியத்துடன் தான் இருக்கிறார்கள். இருப்பினும் பல சுயேட்சைக்குழுக்களின் தோற்றம் மற்றும் பல வருடகால அரசியல் கட்சிகள் தேர்தல் உடன்பாடுகளுக்கு இடம்கொடுக்காமை போன்றவற்றால் அவர்கள் செய்வதறியாது பிரிந்துநின்று வாக்களித்திருக்கிறார்கள். அதேவேளை தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்குக் கிடைத்திருக்கும் வாக்குகளின் மொத்தத்தொகையைப் பார்த்தால், தமிழ்த்தேசியத்துக்கான எமது மக்களின் ஆதரவு குறையவில்லை என்ற விடயமே புலனாகிறது. ஆகவே தமிழ்த்தேசமும், தமிழ்த்தேசியமும் அழியவில்லை. மாறாக தமிழ்த்தேசியத்தை ஆதரித்தோர் தம்முள் பிரிந்துநின்று அரசாங்கத்தை வெற்றியடையச்செய்திருக்கிறார்களே தவிர, தமிழ்த்தேசியத்தைத் தமிழ் மக்கள் கைவிட்டுவிடவில்லை. அதேவேளை ஐ.நா சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் உறுப்புரை ஒன்றின்கீழ் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ்த்தேசம் என்பதை எந்தவொரு இலங்கை அரசாங்கமும் ஏற்காதவரை, வட, கிழக்கு தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். |