ஜேஆரின் அரசியலமைப்பை வலுப்படுத்துகிறது அரசாங்கம்!
|
ஜே.ஆரின் அரசியலமைப்பில் ஒருபோதும் வாழ முடியாது எனக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது 22ஆவது திருத்தத்தின் மூலம் அதே அரசியலமைப்புக்கு மேலும் வலுச் சேர்க்க முற்படுகிறது என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் நிறைவேற்று சபை உறுப்பினர் துமிந்த நாகமுவ குற்றம் சாட்டினார். |
|
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் நோக்கில் மக்கள் போராட்ட இயக்கத்தினால் நேற்று சனிக்கிழமை (08) நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 20க்கும் மேற்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களில் பெரும்பாலானவை ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவே கொண்டுவரப்பட்டன. முன்னர் அரசியலமைப்பு திருத்தங்களை கடுமையாக விமர்சித்து வந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அவசர அவசரமாக இந்த 22ஆவது திருத்தத்தை கொண்டுவந்துள்ளது. நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகக் கூறிய வாக்குறுதி, தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறிய வாக்குறுதி மற்றும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாகக் கூறிய வாக்குறுதிகள் என அனைத்தையும் அவர்கள் தற்போது மறந்துவிட்டு செயற்படுகின்றனர். 2015ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் ஜே.ஆரின் அரசியலமைப்பின் கீழ் இனி ஒருநாளும் வாழ முடியாது என பிரச்சாரம் செய்தவர்களே இன்று 22ஆவது திருத்தத்தின் மூலம் அதற்கு மேலும் வலுச்சேர்க்க முயல்கின்றனர். இந்த திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 63 இலிருந்து 65 ஆகவும், கீழ் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்துவதற்கே இந்த திருத்தம் கொண்டுவரப்படுவதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யான கூற்றாகும். ஏனெனில் நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி கிடப்பதற்கு பிரதான காரணம் சட்டமா அதிபர் திணைக்களத்தில் காணப்படும் 200க்கும் மேற்பட்ட அதிகாரி பற்றாக்குறையும் மனிதவளப் பற்றாக்குறையுமே தவிர, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது அல்ல. அதேபோன்று வைத்தியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இல்லாத ஆயுட்கால அதிகரிப்பு நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாத்திரம் எவ்வாறு தனித்துவமாக அதிகரித்தது என்பதும் நகைப்புக்குரியது. எனவே, இந்த அவசர திருத்தத்தின் உண்மையான நோக்கம், இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வுபெறவுள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் பதவிக்காலத்தை நீடிப்பதேயாகும். தலைமை நீதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு சற்று முன்னர் இவ்வாறானதொரு திருத்தத்தை கொண்டுவருவது, நிறைவேற்று அதிகாரமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இலக்கு வைத்து வழங்கும் ஒரு இலஞ்சமாகும். மக்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் மற்றும் சட்டமூலங்களின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை தொடர்பில் தீர்மானிக்கும் உச்ச அதிகாரம் கொண்ட தலைமை நீதிபதியை அரசாங்கம் தனது தேவைக்கேற்ப கையாளவே இந்த திருத்தத்தை கொண்டுவருகிறது. எனவே, இது கட்டாயம் பொதுவாக்கெடுப்பிற்கு செல்ல வேண்டிய ஒரு விடயமாகும் என்றார். |