அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 27.9 வீதமே செலவு!
|
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாயில், செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் 385 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ள நிலையில், அட்டன் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாயும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றம் சாட்டினார். |
|
2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்காக 1,380 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையில் 385 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 27.9 சதவீதமாகும். இதன்படி, 995 பில்லியன் ரூபாய் இன்னும் செலவிடப்படாமல் உள்ளது. இந்த 995 பில்லியன் ரூபாயில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கழித்த பின்னர், உண்மையில் எவ்வளவு தொகை மீதமாக உள்ளது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும். பாதீட்டில் பெரும் தொகை நிதி ஒதுக்கீடுகளை அறிவித்து, அதற்காக கைதட்டல்கள், மலர் மாலைகள் மற்றும் வெற்றிக் கோஷங்கள் இடம்பெறுகின்றன. ஆனால், ஒதுக்கப்படும் நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படாமல் மீண்டும் திரும்பிச் செல்கின்றது. அட்டன் நகர அபிவிருத்திக்காக 50 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த நிதியும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் தற்போது பத்திரமாக வீடு திரும்பியுள்ளது. அட்டன் நகரில் ஒருவர் நடுவீதியில் அநுர குமார திஸாநாயக்கவின் படத்தை வைத்து, 'எங்கள் குல சாமி' எனக் கூறி கை கூப்பி வணங்கியிருந்தார். தற்போது அட்டன் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியே பயன்படுத்தப்படாமல் திரும்பியுள்ள நிலையில், 'குல சாமி' எனக் கொண்டாடிய அந்த 'குலவிளக்கை' நான் தேடிக்கொண்டிருக்கின்றேன். ஒதுக்கப்படும் நிதி பயனில்லாமல், உரிய திட்டமிடல் இல்லாமல் மீண்டும் திரும்புகின்றது என்றால், கையாலாகாத அரசு என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் தொடர்பான அமைச்சு வாரியான விபரங்களைப் பெற்றுத் தருமாறு பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஊடாக பொது நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். 2027 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்குவதற்கு முன்னர், 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும் என மனோ கணேசன் மேலும் சுட்டிக்காட்டினார். |