தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் மற்றும் அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக பரவி வரும் செய்திகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தவெகவுடன் கூட்டணி குறித்து எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை; ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் வெறும் கற்பனையே" என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு, அதிமுக அவருடன் கைகோர்க்க வாய்ப்புள்ளதாக பல யூகங்கள் கிளம்பின. குறிப்பாக, துணை முதல்வர் பதவி மற்றும் அமைச்சர் பதவிகள் பகிர்வு குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடப்பதாக செய்திகள் வெளியாயின.
இதனை மறுத்துள்ள ஈபிஎஸ், தவெகவுடன் கூட்டணி என்று பரவும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் கூறியுள்ளார். விஜய்யின் கட்சி தரப்பிலும் இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இந்த சூழலில், ஈபிஎஸ்-ஸின் இந்த விளக்கம் அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்த குழப்பங்களுக்கு தற்காலிகமாக திரை போட்டுள்ளது.
இருப்பினும், வரும் தேர்தலில் கூட்டணி கணக்குகள் எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.