அதிஷ்ட இலாப சீட்டை வென்றவருக்கு போனது நிம்மதி -தலைமறைவாக வாழும் நிலை

25.09.2022 10:11:32

மன நிம்மதிபறிபோனது

கேரளாவில் ரூ.25 கோடி மதிப்பிலான அதிஷ்ட இலாப சீட்டை வென்ற ஆட்டோ ஓட்டுநர் அனூப் என்பவர் வெற்றிக்கு பின்னர் மன நிம்மதியை இழந்துவிட்டதாக தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

தனது மகனின் உண்டியல் காசு எடுத்து அனூப் வாங்கிய அந்த டிக்கெட்டிற்கு 25 கோடி ரூபாய் பரிசாக விழுந்திருக்கிறது. மலேசியாவுக்கு சமையல்காரராக செல்ல இருந்த அனூப் இதன்மூலம் கோடீஸ்வரராக மாறினார். 

ஆனால் இப்போது அவருக்கு வேறு ஒரு சிக்கல் முளைத்திருக்கிறது. அதிஷ்ட இலாப பரிசு விழுந்தது முதல், பலரும் கடன்கேட்டு தொந்தரவு செய்வதாகவும், அதனால் தலைமறைவாக வாழ்ந்து வருவதாகவும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார் அனூப். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அனூப் வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில்,"ஓணம் சிறப்பு அதிஷ்ட இலாப பரிசு கிடைத்தபோது மிகவும் சந்தோஷமாக இருந்தது. பல ஊடகங்கள் இருந்து என்னை பேட்டியெடுக்க வந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது

 

ஆனால், இப்போது அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டது. தினமும் உதவிகேட்டு பலபேர் வருகிறார்கள். நான் இப்போது எனது சகோதரியின் வீட்டில் இருக்கிறேன். எனது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. அதனாலேயே இங்கு வந்திருக்கிறேன். ஆனால், இதையும் தெரிந்துகொண்டு இங்கேயும் ஆட்கள் வருகிறார்கள். இதை நான் பேசிக்கொண்டிருக்கும்போதே வீட்டு கதவை தட்டுகிறார்கள்.

என்னுடைய குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலையில் இருக்கிறேன். எதற்காக இவ்வளவு பரிசு கிடைத்தது என இப்போது யோசிக்கிறேன். மூன்றாம் பரிசு கிடைத்தால் கூட நிம்மதியாக இருந்திருப்பேன். எனக்கும் பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் உண்டு. ஆனால், இன்னும் எனக்கு பணம் வந்துசேரவில்லை. வரி குறித்து இன்னும் பல தகவல்கள் தெரியவேண்டியுள்ளது. ஆகவே என்னுடைய நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்" என கவலையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.