அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய் அலற போகும் அறிவாலயம்!

15.06.2026 08:39:12

திமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு துறைகளில் நடைபெற்றதாகக் கூறப்படும் டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரகசிய குழுக்களை அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள சூழலில் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, தொழில்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த துறைகளுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் பணிகளில் பெரும்பாலானவை டெண்டர் முறையின் மூலம் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம். டெண்டர் முறைகேடு சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், குடிநீர் திட்டங்கள், பள்ளி மற்றும் மருத்துவமனை கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சில துறைகளில் டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பணிகள் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சில பணிகளில் கமிஷன் பரிவர்த்தனைகள் நடைபெற்றதாகவும் அரசுத் தரப்பில் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. விஜய் அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக கூறப்படும் முதல்வர் விஜய், அரசுப் பணிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக டெண்டர் ஒதுக்கீடுகளில் அரசியல் தலையீடுகள் இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு துறைகளில் பணியாற்றும் நேர்மையான அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை தேர்வு செய்து சிறப்பு ஆய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிக நிதி ஒதுக்கீடு இந்த குழுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளில் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட டெண்டர்கள், ஒப்பந்தங்கள், பணிகள் நிறைவேற்றப்பட்ட விதம் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து வருகின்றன. துறை வாரியாக சேகரிக்கப்படும் தகவல்கள் அந்தந்த துறைகளின் செயலர்கள் மூலம் தொகுக்கப்பட்டு அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பெரிய அளவிலான கட்டுமானப் பணிகள், உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்டப்பேரவை வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும், கடந்த ஆட்சியில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவாதங்களுக்கும் பதிலளிக்கும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அதே நேரத்தில், இந்த நடவடிக்கையை திமுக தரப்பு அரசியல் பழிவாங்கலாக விமர்சிக்கக்கூடும் என்ற கருத்தும் நிலவுகிறது. ஆய்வு குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமா, அல்லது இது நிர்வாக ரீதியான மதிப்பீடாகவே முடிவடையுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் ஏற்கனவே தேர்தல் தோல்வி, கட்சி தாவல்கள், கூட்டணி மாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது டெண்டர் முறைகேடு ஆய்வு விவகாரமும் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த ரகசிய குழுக்களின் அறிக்கைகள் வெளியாகும் போது, கடந்த ஆட்சிக் கால நிர்வாக செயல்பாடுகள் குறித்து மேலும் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரலாம் என்கின்றனர் தவெகவினர்.