தோனி இம்முறை ஐ.பி.எல்லுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – பிராட் ஹொக்

30.09.2021 13:41:27

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மஹேந்திர சிங் தோனி இம்முறை நடைபெற்றுவரும் ஐ.பி.எல். போட்டியுடன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என அவுஸ்திரேலிய  கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹொக் தனது வலையொளியில் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணிக்கு உலக கிண்ணம், உலக இருபதுக்கு 20 கிண்ணம் உள்ளிட்ட பல்வேறு கிண்ணங்களை வென்று கொடுத்த மகத்தான அணித்தலைவராக மஹேந்திர சிங் தோனி விளங்குகிறார்.

கடந்த  2019 ஆம் ஆண்டு யூலை மாதம்  9 ஆம் திகதியன்று நியூஸிலாந்து அணிக்கெதிராக விளையாடியமையே அவரது கடைசி சர்வதேசப் போட்டியாகும். அதன் பின்னர் கடந்த ஆண்டு இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

இந்நிலையில், ” அவர் தற்போது துடுப்‍பெடுத்தாடும் திறனை இழந்து விட்டார். அவர் துடுப்பெடுத்தாடுவதற்கும் அவரின் கால்கள் நகர்த்தப்படுவதற்கும் இடையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது.  அவரால் தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பெடுத்தாட முடியும் என கூற முடியாது. 40 வயதான தோனி தற்போது தளர்ச்சியடைந்துவிட்டார்.

ஆகவே, இம்முறை ஐ.பி.எல். தொடருடன் தோனி ஐ.பி.எல். அரங்கிலிருந்தும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடக்கூடும்.  எனினும், அவரை  சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வேறு கடமைகளில் பயன்படுத்தக்கூடும்” என்றார்.