ஹக்கீமின் ‘மறதி’ மாயாஜாலம்.

15.06.2026 08:00:00

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனின் பாதுகாப்பு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் கடந்த 11.06.2026 அன்று, கருத்து வெளியிட்டிருந்தமை தொடர்பில், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“எந்தவொரு பிள்ளையும் தனது பெற்றோரின் செயல்களுக்குப் பொறுப்பாகக் கருதப்படக் கூடாது என்பது சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் அடிப்படை. அதேவேளை, பிரபாகரனின் மகனைப் பற்றிப் பேசும் அரசியல் தலைவர்கள், அவரது உத்தரவின் பேரில் உயிரிழந்த ஏனைய சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக, 1990 ஜூன் 11 அன்று கிழக்கு மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட 600 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளின் நினைவு மற்றும் நீதிக்கான கோரிக்கைகள் ஏன் தேசிய மட்டத்தில் ஹக்கீமால் பேசப்படவில்லை?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

1990 ஜூன் 11 அன்று, இந்திய அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஆயுதங்களைக் கீழே வைக்குமாறு பணிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் கடந்த 36 ஆண்டுகளாக நீதிக்காகக் காத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ஒரு தரப்பினரின் வலி மட்டுமே தேசிய நினைவகத்தில் இடம்பெற்று, மற்றொரு தரப்பினரின் துயரம் புறக்கணிக்கப்படுவது சமநீதிக்குப் பொருந்தாது. இலங்கையில் ‘போட்டி பாதிக்கப்பட்ட நிலை’  காணப்படுவதால், சில சமூகங்களின் துயரங்கள் மௌனமாக்கப்படுகின்றன. 1990 ஜூன் 11 சம்பவம் என்பது சரணடைந்த அரச அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வாகும். இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் ஆராயப்பட வேண்டிய விடயமாகும்” என்றார்.

இதன் நிமித்தம் அவர் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்:

  • இச்சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
  • உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்காகத் தேசிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும்.
  • இந்த வரலாற்றுச் சம்பவம் பாடசாலைப் பாடப்புத்தகங்களில் உள்வாங்கப்பட வேண்டும்.

“ஒரு பிள்ளையின் உரிமையைப் பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ, நாட்டிற்காக உயிர்நீத்த தந்தையரின் நினைவைப் பாதுகாப்பதும் அவ்வளவு முக்கியமானது. அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமமான நீதியும் கௌரவமும் வழங்கப்படும் போதே உண்மையான நல்லிணக்கம் உருவாகும்” என்று கலீலுர் ரஹ்மான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.