கடன் பெற்று வாங்கிய ஆயுதங்களை காட்சிப்படுத்துவதில் என்ன தவறு?

05.02.2026 14:49:04

நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், அதனைத் தவிர்ப்பதன் மூலம் அரசாங்கம் பாரிய உயிர்த்தியாகத்தால் ஈட்டப்பட்ட யுத்த வெற்றியை சிறுமைப்படுத்துவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை (5) கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், சுதந்திர தின அணிவகுப்பின் போது இராணுவப் படைப்பிரிவுகளை முறையாக அறிமுகப்படுத்தும் மரபு இம்முறை மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அருகில் கடந்து செல்லும் போது ஒவ்வொரு இராணுவப் பிரிவின் விசித்திரங்கள் மற்றும் சாதனைகள் வழக்கமாகச் சொல்லப்படும், ஆனால் இம்முறை அத்தகைய கௌரவம் வழங்கப்படாமல் 'தித்வா' சூறாவளி பற்றி மட்டுமே பேசப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தின் போது தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகள் முன்னிலையிலேயே இந்தச் செயல் இடம்பெற்றுள்ளதை அவர் கடுமையாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தமிழ் புலம்பெயர் அமைப்புகளின் செய்தியையோ அல்லது அவர்களது தேவைகளையோ நிறைவேற்றுகிறாரோ என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகத் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விடயங்களை முன்வைக்க வேண்டாம் என புலம்பெயர் அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்த அவர், அரசாங்கம் யாருடையதோ ஒரு தனிப்பட்ட தேவைக்காகச் செயற்படுவதாகத் தெரிவதாகவும் குற்றம் சாட்டினார்.

கல்வித் துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த துமிந்த திசாநாயக்க, 6-ஆம் தர பாடப்புத்தகங்களில் குளறுபடிகள் இருப்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்காக கல்வி அமைச்சின் செயலாளர் சி.ஐ.டி வரை செல்வது தேவையற்றது என்றார்.

கல்விப் புலத்தில் தவறு செய்தவர்களை நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், அரச அதிகாரிகள் கர்வத்துடன் செயற்படக்கூடாது எனவும், அவ்வாறான போக்கைக் கடைப்பிடித்தால் ஒருநாள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட நேரிடும் என்றும் எச்சரித்தார்.

அதேவேளை, கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட்டமையை வரவேற்ற அவர், சுதந்திர தினத்தன்று கறுப்புக்கொடி ஏந்தி அரசாங்கத்திற்கும் அரசியலமைப்புக்கும் எதிராகச் செயற்பட்ட நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.