ஐ.நாவின் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை!

01.09.2026 09:05:00

நீதிபதிகளின் பதவிக்காலத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் நேரடியான பதில்களை வழங்கவில்லை.மாறாக, கோரப்பட்ட அறிக்கைகள்,ஆலோசனைப் பதிவுகள், மதிப்பீடுகள் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சமர்ப்பிக்காமல் பரந்த அளவிலான உறுதிமொழிகளையே மீண்டும் மீண்டும் குறிப்பிட்டுள்ளது என சுட்டிக்காட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதித்து கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

   

மிக அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்கள். ஊழியர் பற்றாக்குறை மற்றும் வழக்கு தாமதங்களைக் கையாள்வதற்குப் பதிலாக, தற்போதைய சிரேஷ்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை ஏன் மாற்றுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும். இத்திருத்தத்திற்கு எதிரான வழக்கை மேலும் வலுப்படுத்துகிறது. அந்த வகையில், குற்றத்தை விட அதன் பாதுகாப்பே மிகவும் மோசமானது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

நீதிபதிகளின் பதவிக்காலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சிறப்பு தூதுவர் கடந்த மாதம் 7 ஆம் திகதி அனுப்பி வைத்த கடிதத்திற்கு அரசாங்கம் நீண்டதொரு பதிலை அனுப்பியுள்ளது. ஆனால் அந்த கடிதத்தில் பிரதான கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசாங்கம் தவறியுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் தொடர்பாக சிறப்பு தூதர் 7 தெளிவான கேள்விகளைக் கேட்டிருந்தார். தற்போதைய நீதிபதிகளுக்கு இது ஏன் பொருந்த வேண்டும், யாருடன் ஆலோசனைகள் நடாத்தப்பட்டன,என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையில் இதன் தாக்கம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா போன்றவை இதில் அடங்கும்.

அரசாங்கம் தனது கடிதத்தில் சில பின்னணித் தகவல்களை வழங்கியுள்ளதே தவிர, நேரடி மற்றும் முழுமையான பதில்களை ஒருபோதும் வழங்கவில்லை. மாறாக, கோரப்பட்ட அறிக்கைகள்,ஆலோசனைப் பதிவுகள், மதிப்பீடுகள் அல்லது பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சமர்ப்பிக்காமல் பரந்த அளவிலான உறுதிமொழிகளையே மீண்டும் மீண்டும் கூறுகிறது.

அரசியலமைப்பின் 107(5) ஆவது பிரிவு உயர்நீதிமன்ற நீதியசர்கள் ஓய்வுபெறும் வயதை 65 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை 63 ஆகவும் நிர்ணயித்துள்ளது. முன்மொழியப்பட்ட 22வது திருத்தம் அந்த வயதை முறையே 67 மற்றும் 65 ஆக மாற்றியமைக்கும். மேலும் பிரதம நீதியரசர் ஆறு ஆண்டுகள் என்ற வரம்பை அறிமுகப்படுத்தும் (67 வயதில் ஓய்வு பெறுவதற்கு உட்பட்டு, இதில் எது முதலாவதாக வருகிறதோ அது பொருந்தும்).

இந்த முன்மொழிவைப் பாதுகாக்கும் வகையில், உறுப்புரைகள் 105,107,108, 111, 111 (இ) மற்றும் 111 ஆகியவற்றை அரசாங்கம் பட்டியலிடுகிறது. இந்த விதிகள் நீதித்துறையின் அரசியலமைப்பு நிலை,நியமனங்கள், பதவிக் காலம்,சம்பளம், நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் தலையீடுகளுக்கு எதிரான பாதுகாப்பு தொடர்பானவை.

ஆனால் இந்த பொதுவான பாதுகாப்புகளைக் குறிப்பிடுவது சிறப்பு தூதரின் கேள்விகளுக்கு பதிலாக அமையாது. அரசியலமைப்பின் 107(5) பிரிவின் மூலம் பாதுகாக்கப்பட்ட நீதித்துறை பதவிக் காலத்தின் ஒரு நிபந்தனையை மாற்ற அரசாங்கம் முன்மொழிவதாலும், அது தற்போதைய நீதிபதிகளுக்கு உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் தான் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

பிற அரசியலமைப்புப் பாதுகாப்புகள் இருப்பதால் மட்டுமே,தற்போதைய நீதிபதிகளின் பதவிக் கால அமைப்பை மாற்றுவது நிறைவேற்று அதிகாரம் அல்லது சட்டமன்றத்தின் செல்வாக்கு இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காது. மேலும், இதன் முதல் பயனாளிகள் ஏற்கனவே அடையாளம் காணக்கூடியவர்களாக இருக்கும்போது, இந்த முன்மொழிவு பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வாறு பாதுகாக்கும் என்பதையும் அது விளக்கவில்லை.

நீதித்துறை சுதந்திரம் என்பது நீதிபதிகளுக்கு வெளிப்படையான உத்தரவுகளைத் தடுப்பதன் மூலம் மட்டுமே பாதுகாக்கப்படுவதில்லை. செல்வாக்கு, சார்ந்து வாழும் நிலை அல்லது சிறப்பு சலுகைகள் போன்ற நியாயமான சந்தேகங்களைத் தடுக்கும் நிறுவன அமைப்புகளும் அதற்கு அவசியமாகும்.

இந்த திருத்தம் தற்போதைய நீதிபதிகளுக்கு ஏன் பயன்படுத்தப்பட வேண்டும்,என்னென்ன இடைக்காலப் பாதுகாப்புகள் பரிசீலிக்கப்பட்டன,உண்மையான அல்லது உணரப்பட்ட அரசியல் தலையீடுகள் எவ்வாறு தடுக்கப்படும்,இத்திருத்தத்தால் பயனடையும் நீதிபதிகள் சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் எவ்வாறு நிர்வகிக்கப்படும்,முன்மொழிவு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு யாருடன் ஆலோசனை நடத்தப்பட்டது,ஏதேனும் சுயாதீன மதிப்பீடு நடத்தப்பட்டதா,

இந்த திருத்தம் பொதுமக்களின் நம்பிக்கையை எவ்வாறு பாதிக்கும்,குறிப்பிடப்படும் விரிவான நீதித்துறை சீர்திருத்தத் திட்டத்தை எங்கே காணலாம் என்ற கேள்விகளுக்கு அரசாங்கம் நேரடியாக பதிலளிக்கவில்லை.

மிக அதிக வழக்குகள் நிலுவையில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் உள்ள வெற்றிடங்கள். ஊழியர் பற்றாக்குறை மற்றும் வழக்கு தாமதங்களைக் கையாள்வதற்குப் பதிலாக, தற்போதைய சிரேஷ்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை ஏன் மாற்றுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும்.எனவே, இந்த பதில் சிறப்பு தூதரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தவறியது மட்டுமல்லாமல், ஆலோசனை,ஆதாரம், மதிப்பீடு மற்றும் வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புகள் இல்லாததை வெளிப்படுத்துவதன் மூலம், இத்திருத்தத்திற்கு எதிரான வழக்கை மேலும் வலுப்படுத்துகிறது.அந்த வகையில், குற்றத்தை விட அதன் பாதுகாப்பே மிகவும் மோசமானது.