சமரி குவித்த சதத்தினால் இறுதியில் இலங்கை வெற்றி:

08.05.2024 08:05:46

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (07) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 தகுதிகாண் இறுதியில் சமரி அத்தபத்து குவித்த சதத்தின் உதவியுடன் ஸ்கொட்லாந்தை 68 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.

எவ்வாறாயினும் இறுதிப் போட்டிக்கு முன்னரே இரண்டு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை உறுதிசெய்துகொண்டன.

உலகக் கிண்ணப் போட்டியில் முதலாம், இரண்டாம் தகுதிகாண் அணிகளைத் தீர்மானிக்கவே இறுதிப் போட்டி நடத்தப்பட்டது. 

இந்த வெற்றியை அடுத்து பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன்  இலங்கை இணைந்தது.

வரவேற்பு நாடான பங்களாதேஷ், இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகளுடன்  பி குழுவில்     ஸ்கொட்லாந்து  இணைந்தது.

  இனோஷிக்கா ப்ரபோதனியில் சிறப்பான பந்துவீச்சும் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியது.  

தகுதிகாண் சுற்றின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியின் அற்புதமான ஆற்றலை வெளிப்படுத்தி 63 பந்துகளில் 13 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைக் குவித்தார்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நோர்த் சிட்னியில் 2019 செப்டெம்பர் மாதம் தனது கன்னிச் சதத்தைக் குவித்த சமரி அத்தபத்து சுமார் நான்கரை வருடங்களின் பின்னர் இப்போது  மீண்டும் சதம் குவித்துள்ளார்.

சமரி அத்தபத்து ஒரு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் மறுபக்கத்தில் விஷ்மி குணரட்ன (9), ஹர்ஷித்தா சமரவிக்ரம (8), கவிஷா டில்ஹாரி (15) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (55 - 3 விக்.)

இந் நிலையில் சமரி அத்தபத்து, நிலக்ஷிகா சில்வா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

கடைசி ஓவரில் சமரி அத்தப்பத்து ஆட்டம் இழந்ததும் அடுத்த பந்தில் ஹசினி பெரேரா (0) ஆட்டம் இழந்தார்.

நிலக்ஷிகா சில்வா 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரஷேல் ஸ்லேட்டர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை இழந்தார்

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 170 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஸ்கொட்லாந்து பவர் ப்ளே நிறைவுக்கு முன்னர் 4 விக்கெட்களை இழந்தது.

ஆட்டம் இழந்த நால்வரில் ஆரம்ப வீராங்கனை சஸ்கியா ஹோர்லி (10) மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.

அதன் பின்னர் ப்ரியனாஸ் செட்டர்ஜி, லோனா ஜெக் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியைத் தாமதப்படுத்தினர்.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ப்ரியனாஸ்   செட்டர்ஜி 30 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து லோனா ஜெக் 12 ஓட்டங்களுடனும் கெத்தரின் ப்ரேசர் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.

எனினும் பின்வரிசையில் ரஷேல் ஸ்லேட்டர் (15 ஆ.இ.), க்ளோ ஆபெல் (11 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 26 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணி 100 ஓட்டங்களைக் கடப்பதற்கு உதவினர்.

பந்துவீச்சில் உதேஷிக்கா ப்ரபோதனி ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இனோஷி ப்ரியதர்ஷனி, சுகந்திகா குமாரி, கவிஷா டில்ஹாரி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: சமரி அத்தபத்து.