ஜனாதிபதி அனுர எச்சரிக்கை.

23.01.2025 14:44:20

அரசாங்கத்தின் பொறிமுறைகளை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலைகளை விட அதிகமாக அரிசியை விற்பதற்கு எவருக்கும் அனுமதிவழங்கப்படாது என தெரிவித்துள்ள அவர் அரிசி ஆலை உரிமையாளர்கள் அரசாங்கத்தின் பொறிமுறைகளை ஏற்காவிட்டால் அரிசி ஆலைகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.

அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வை காண்பதற்காக அரசாங்கம் பொறிமுறையொன்றை அறிவிக்கும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி இதற்கு சிறிது காலம்எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

புள்ளிவிபரங்களில் பெரும் வேறுபாடுகள் காணப்படுகின்றது, அரசாங்கம் எவ்வாறு நடவடிக்கை எடுக்க முடியும் என கேள்விஎழுப்பியுள்ள ஜனாதிபதி பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை பதுக்குகின்றனர் என்பது பொய் என குறிப்பிட்டுள்ளார்.

அரிசியை அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல்விற்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வை காண்பதற்கு நாங்கள்ஒரு பொறிமுறையை உருவாக்குவோம் அந்த பொறிமுறையை அரிசி ஆலை உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அரிசி ஆலைகளை கட்டுப்படுத்த இராணுவத்தை பயன்படுத்துவோம் ஆலைகள் வழங்குகின்ற அரிசியின் அளவு போன்ற விபரங்களை பதிவு செய்யும் இராணுவத்தினர் வர்த்தகநிலையங்களிற்கு அரிசி ஆலைகள் என்ன விலைக்கு அரிசியை வழங்குகின்றன என்பதை கண்காணிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்..

அரிசிஆலைகள் அதன் முகாமையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழேயே செயற்படும் அதன் ஊழியர்களே அதனை இயக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஜனநாயகமா என்ற கேள்விக்கு ஜனாதிபதி நாட்டில் அரிசி குறித்து பேசும்போது ஜனநாயகம் குறித்து பேசுவது அர்த்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.