எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் .

12.07.2025 09:41:36

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

 

கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது.

இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது.

இதில், விபத்து இடம்பெற்ற தினத்தில் விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்ததாகவும் ஆனால் விபத்துக்குப் பின்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அறிக்கையில்,
விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன.

விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category ‘C’ Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன.

 

எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.