இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா நிதான துடுப்பாட்டம் !

13.08.2021 12:11:14

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இந்தியா அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆட்டநேர முடிவில் கே.எல். ராகுல் 127 ஓட்டங்களுடனும் அஜிங்கியா ரஹானே ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இந்தியா அணி சார்பில், ரோஹித் சர்மா 83 ஓட்டங்களுடனும் புஜாரா 9 ஓட்டங்களுடனும் விராட் கோஹ்லி 42 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் ஒல்லி ரொபின்சன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளில், இந்தியா அணி இன்று துடுப்பெடுத்தாடவுள்ளது.