’எதிர்க்கட்சிகளுக்கு முதுகெலும்பு இல்லை’

05.07.2024 08:16:21

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.        
 
தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசினாலும் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
 
கம்பஹா, மினுவாங்கொடை பிரதேசத்தில் வியாழக்கிழமை (4) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியதாவது:
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே பாரிஸ் மாநாட்டில் நாட்டின் கடனை மறுசீரமைக்க தீர்மானிக்கப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் நாடும் மக்களும் எதிர்பார்க்கும் பொருளாதார, அரசியல், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளை தற்போதைய ஜனாதிபதியால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எனவே, அவரை மீண்டும் ஒருமுறை ஜனாதிபதியாக நியமிப்பதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்களுக்குள், உலகின் பலமான பொருளாதாரம் கொண்ட நாடாக இலங்கையை உருவாக்க முடியும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் நாடு எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். எரிபொருள் இல்லை, மருந்து  இல்லை, எரிவாயு இல்லை, சிறு குழந்தைக்கு பால் மா இல்லை, அத்தியாவசிய சேவைகள் நிறுத்தப்பட்டன. கட்டுமானத் தொழில்கள் அனைத்தும் சரிவடைந்தன. முழு நாடும் விரக்தியில் இருந்தது. ஜனாதிபதி சிக்கலில் இருந்து நாட்டைப் பொறுப்பேற்கும் போது ஒரு பக்கம் கடுமையான பொருளாதார நெருக்கடி, மறு பக்கம் பாரிய மக்கள் எதிர்ப்புமாக இருந்தது.

அப்போது மொட்டுக் கட்சியாகிய நாம் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தோம். ரணில் விக்கிரமசிங்கவுடன் எங்களுக்கு நிறைய அரசியல் பாக்கிகள் இருந்தன. ஆனால் நாட்டுக்காக அதனை மறந்துவிட்டோம். இரண்டு வருடங்கள் கழித்து இன்று நாடு எங்கே இருக்கிறது என்று பார்க்கும் போது அன்று நாம் எடுத்த முடிவு 100 சதவீதம் சரியானது என்று மகிழ்ச்சி அடைகிறோம்.

தற்போது ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஒரு கதை வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க ஜனாதிபதிக்கோ அல்லது எமக்கோ விருப்பமோ, தேவையோ இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அது நிரந்தரமானது. தேர்தலை சந்திக்க முதுகெலும்பில்லாத எதிர்க்கட்சிகள் தேர்தலை ஒத்திவைப்பது பற்றி பேசுகின்றன என்றார்.

 நாட்டுக்கு ஒரு சவால் வந்தபோது அதனை எதிர்கொள்ளும் பலமான முதுகெலும்பு ஜனாதிபதிக்கு மட்டுமே இருந்தது. ஐ.ம.சக்தியும் திசைகாட்டியும் விசித்திரக் கதைகளைச் சொல்கின்றன. அதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள். மக்கள் விடுதலை முன்னணி, திசைகாட்டி என்ற பெயரில் மாறுவேடத்தில் வந்துள்ளது. ஆனால் அவர்களின் இரத்த வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. எதிர்க்கட்சித் தலைவரும், அனுரகுமாரவும் மரண வீடுகளில் தனிமையைப் போக்குவதற்குத்தான் பொருத்தமானவர்கள். அதனால் அந்த இருவரையும் அந்த வேலைக்கு வைத்துக் கொள்வோம். நாட்டைக் கட்டியெழுப்பிய ரணிலிடம் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலையை ஒப்படையுங்கள்.

மொட்டுக் கட்சி ஒரு ஜனரஞ்சகக் கட்சி. நாட்டை ஒருங்கிணைத்த ஜனரஞ்சகத் தலைவர் மஹிந்த ராஜபக்ச, எமது ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை சரியான நேரத்தில் நாட்டுக்கு தெரிவிப்பார். எங்களிடம் ஒரு வெற்றி வேட்பாளர் இருக்கிறார். நாங்கள் வெற்றிப் பக்கம் இருக்கிறோம். அதனால் தான், சந்திகளிலும், வீதியோரங்களிலும் “நான்தான் மொட்டின் வேட்பாளர்” என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதைக் கணக்கெடுக்காதீர்கள்.

வளமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக பல சமூக மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். எமது நாட்டு மக்களும் பாரிய அரசியல் சீர்திருத்த நடவடிக்கையை எதிர்பார்க்கின்றனர். தன்னால் தனக்கான காரியங்களைச் செய்ய முடியும் என்பதை நாட்டுக்கு உழைத்து நிரூபித்த ஒரே தலைவர் ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. அதனால்தான் இப்போது ரணில்தான் ஆள் என்று கிராம மக்கள் சொல்கிறார்கள்.