அழியா மையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
|
தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக வாக்காளர்களின் விரல்களில் அழியாத பூச்சு (மை) இடும் சட்ட ரீதியான ஏற்பாடுகளை அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் முழுமையாக நீக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்வைத்துள்ள விசேட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
|
|
இலங்கையில் தேர்தல்களுக்கான சட்ட ஏற்பாடுகளின் கீழ், கடந்த 2004 ஆம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்ட தேர்தல்களின் போது வாக்களிப்பதற்காக சமூகமளிக்கும் வாக்காளர்கள் செல்லுபடியான அடையாள அட்டை மூலம் தத்தமது ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், அவ்வாறு வரும் அனைத்து வாக்காளர்களுக்கும் அழியாத பூச்சைப் பயன்படுத்தி பொருத்தமான விரலில் அடையாளமிடுவதும் கட்டாயமான நடைமுறையாக இருந்து வருகின்றது. ஆளடையாளத்தை உறுதிப்படுத்துதல் மற்றும் விரலில் மையிடுதல் ஆகிய இந்த இரண்டு பணிகளின் மூலமும் எதிர்பார்க்கப்படுவது, வாக்காளர் ஒருவர் ஒரு தேர்தலில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வாக்களிப்பதைத் தடுப்பதேயாகும். எனினும், ஒரே எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்கொன்று வேறான இரண்டு வௌ;வேறான முறைமைகளை ஒரே நேரத்தில் கடைப்பிடிப்பதன் காரணமாக, வாக்கெடுப்பு நிலையங்களில் கடமைகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு தடையாக உள்ளமையும், அரசாங்கத்திற்கு இதனால் மேலதிக செலவு ஏற்படுகின்றமையும் அவதானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, அழியாத பூச்சைப் பயன்படுத்தி வாக்காளர்களை அடையாளமிடுவது தொடர்பான சட்டரீதியான ஏற்பாடுகளை நாட்டின் அனைத்து தேர்தல் சட்டங்களிலிருந்தும் நீக்குவது பொருத்தமானது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 38 ஆம் பிரிவு, 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 36 ஆம் பிரிவு, (262 ஆம் அத்தியாயமான) உள்ளுராட்சி அதிகாரசபை தேர்தல் கட்டளைச்சட்டத்தின் 53அ. பிரிவு, 1981 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க மக்கள் தீர்ப்பு சட்டத்தின் 21 ஆம் பிரிவு ஆகிய ஐந்து பிரதான தேர்தல் சட்ட ரீதியான ஏற்பாடுகளை நீக்குவதற்கான சட்டமூலங்களைத் தயாரிப்பதற்கும், அதற்கான மேல்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. |