முதல் ரி-20 தொடரை வென்றது இலங்கை அணி !

30.07.2021 11:47:46

 

இந்தியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20 போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை கிரிக்கெட் அணி கைப்பற்றியது.

மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் 1-1 என சமநிலை அடைந்த நிலையில், தொடரினை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, முதல் ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை இழந்தது.

அணியின் தலைவரான ஷிகர் தவான், துஸ்மந்த சமீரவின் பந்துவீச்சுக்கு தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ஆரம்பமே சற்று தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த நிலையில், 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன்பிறகு களமிறங்கிய சஞ்சு சம்சன் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஓய்வறை திரும்ப, அதே ஓவரின் இறுதிபந்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் 14 ஓட்டங்களுடன் விடைபெற்றார்.

பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரணா, புவனேஸ்வர் குமாருடன் ஜோடி சேர்ந்தார். இதன்போது புவனேஸ்வர் குமார் நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்த நிதிஷ் ரணா, 6 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் களத்தில் இருக்க, நிதான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய புவனேஸ்வர் குமார் 16 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சாஹார் 5 ஓட்டங்களுடனும் வருண் சக்கரவர்த்தி ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குல்தீப் யாதவ் 23 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காது இறுதிவரை களத்தில் இருந்தார்.

இதன்படி இந்தியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ஓட்டங்களை பெற்றது.

இதன்போது இலங்கை அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் தசுன் சானக 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

குறிப்பாக இப்போட்டியில் துடுப்பாட்டத்தில் தடுமாறிய இந்தியா, மிகக் குறைந்த 10 ஓவர்களுக்கான ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.

இந்தியா அணி, 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதுவே இந்திய அணியின் மிகக் குறைந்த 10 ஓவர்களுக்கான ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

அத்துடன் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியக் கிரிக்கெட் அணி, பெற்றுக்கொண்ட இரண்டாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

முன்னதாக அவுஸ்ரேலியா அணிக்கெதிராக 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 32 ஓட்டங்களை பெற்றிருந்ததே மோசமான சாதனையாக உள்ளது.

இதுதவிர ஒரு அணி 20 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி ஆட்டமிழக்காது 20 ஓவர்களையும் பூர்த்தி செய்து, மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கையை பதிவுசெய்த இரண்டாவது அணியாக இந்தியா அணி பெயர்பெற்றுள்ளது.

முதல் அணியாக மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது. அந்த அணி 2010ஆம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கெதிராக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அத்துடன் ரி-20 கிரிக்கெட்டில் இந்தியக் கிரிக்கெட் அணியின் மூன்றாவது மிகக் குறைந்த ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

முன்னதாக இந்தியா அணி, அவுஸ்ரேலியா அணிக்கெதிராக 74 ஓட்டங்களையும் நியூஸிலாந்து அணிக்கெதிராக 79 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இதனைத்தொடர்ந்து 82 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 14.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்பு வெற்றி இலக்கை கடந்தது.

இதன்போது இலங்கை அணி சார்பில், அவிஷ்க பெனார்டோ 12 ஓட்டங்களையும் மினோத் பானுக 18 ஓட்டங்களையும் சதீர சமரவிக்கிரம 6 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் வனிந்து ஹசரங்க 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ராகுல் சாஹார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் பந்துவீசி 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.

அத்துடன் இத்தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக வனிந்து ஹசரங்க தொடரின் நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.

குறிப்பாக பிறந்த நாளில் ஒருவரின் சிறந்த பந்து வீச்சுப் பெறுதியையும் வனிந்து ஹசரங்க முறியடித்துள்ளார்.

இதுவரை தென்னாபிரிக்க அணியின் இம்ரான் தாஹிருக்கு இது சொந்தமாக இருந்தது. அவர் 21 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

கடந்த 12 வருடங்களுக்கு அதாவது 2019ஆம் ஆண்டிற்குப் பின்னர் இலங்கை அணி முதல் தடவையாக ரி-20 தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இப்போட்டியின் வெற்றியுடன் இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி கைப்பற்றியுள்ள ரி-20 தொடர், இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி கைப்பற்றிய முதல் ரி-20 தொடராக அமைந்துள்ளது. 21 ரி-20 போட்டிகளுக்கு பிறகு இந்த தொடரின் வெற்றி வசமாகியுள்ளது.