பான் கிராப்ட்டின் கருத்தால் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல் !
பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக, அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட அவுஸ்ரேலிய வீரர் பான் கிராப்ட்டினால், அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர்களுக்கு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ள 28 வயதான பான் கிராப்ட்டிடம், பந்தை சேதப்படுத்திய யுக்தி அணியின் மற்ற பந்துவீச்சாளர்களுக்கு தெரியுமா என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நிச்சயமாக என்று பதில் அளித்தார். ‘நான் இவ்வாறு செய்தது பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். எனவே அனேகமாக அவர்களுக்கு இது தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை’ என்று கூறினார்.
ஆனால் பந்துவீச்சாளர்களின் பெயர் விபரத்தை அவர் வெளியிடவில்லை. அந்த டெஸ்டில் பெட் கம்மின்ஸ் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகிய பந்துவீச்சாளர்கள் விளையாடியிருந்தனர்.
இதனிடையே பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் புதிய தகவல்கள் இருந்தால் தங்களுக்கு அனுப்பலாம், இது குறித்து மீண்டும் விசாரிக்கப்படும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் போது, பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக அப்போதைய தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணைத்தலைவர் டேவிட் வோர்னர் ஆகியோருக்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடையும் பந்தைய சேதப்படுத்திய பான் கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.