4 நாட்களில் 400 கோடி ரூபாவை வசூலித்த கூலி!

19.08.2025 07:10:00

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரின் மகளாக ஸ்ருதிஹாசனும், நண்பனாக சத்யராஜும், வில்லனாக நாகர்ஜுனா மற்றும் சோபின் ஷாஹிரும் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்திருந்த கூலி திரைப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு இருந்தார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார்.

கூலி திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்று வந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கியதில் இதுதான் ஒர்ஸ்ட் ஆன படம் என்றும் விமர்சித்தனர். 

இப்படத்திற்கு ஓவர் ஹைப் கொடுக்கப்பட்டதே அதற்கு இவ்வளவு நெகடிவ் விமர்சனம் வர காரணமாகவும் கூறப்பட்டது.

கூலி படத்தில் ஏராளமான லாஜிக் மிஸ்டேக் இருப்பதாகவும் சுட்டிக்காட்டி மீம்ஸ்களும் ஏராளமாக பகிரப்பட்டு வந்தன. இதுதவிர கூலி படத்தில் இடம்பெற்ற கேமியோக்கள் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக அமீர்கானை படக்குழு சரிவர பயன்படுத்த தவறி உள்ளதாகவும் கூறப்பட்டது.

இம்புட்டு நெகடிவ் விமர்சனங்கள் வந்தாலும் கூலி படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன வார் 2 படத்தை கிட்டகூட நெருங்க விடாமல் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

வார இறுதி நாட்களிலும் கூலியின் வசூல் வேட்டை தொடர்ந்தது. இந்த மாற்றத்திற்கு காரணம் ஃபேமிலி ஆடியன்ஸ் தான். அவர்களுக்கு இப்படம் பிடித்திருப்பதால், கூலி பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. இப்படம் முதல் நான்கு நாட்களில் இந்தியாவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பதையும், அதன் உலகளாவிய வசூல் நிலவரத்தையும் தற்போது பார்க்கலாம்.

கூலி திரைப்படம் நான்கு நாட்களில் ரூ.உலகளவில் ரூ.389 கோடி வசூலித்து உள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் ரூ.193.25 கோடி வசூலித்திருக்கிறது. குறிப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் உலகளவில் ரூ.63 கோடி வசூலித்துள்ளது இப்படம். இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.23 கோடி வசூலித்திருக்கிறது.

அதேபோல் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ரூ.7.05 கோடியும், இந்தியில் ரூ.5.67 கோடியும், கர்நாடகாவில் ரூ.41 இலட்சமும் வசூலித்துள்ளது. இன்று இப்படம் இந்தியாவில் மட்டும் 7 கோடி வசூலித்தால் இதன் இந்திய பாக்ஸ் ஆபிஸ் மட்டும் ரூ.200 கோடியாக இருக்கும். அதேபோல் உலகளவில் 400 கோடியையும் எட்ட வாய்ப்பு உள்ளது.