மத்திய அரசை கடுமையாக விமர்சித்த செய்த ஸ்டாலின்!

15.07.2025 07:54:47

மத்திய பாஜக அரசு திட்டமிட்டு மாநில உரிமைகளை பறிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த விரும்பிய நிலையில் சுவர் ஏறி குதித்து செல்லும் நிலைக்கு தள்ளபட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படியா நடத்துவது? அனைத்து ஜனநாயகக் குரல்களும் இதனை ஓரணியில் கண்டிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துலா, தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூடாது என்பதற்காக வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட நிலையில், அதனை மீறி சுவர் ஏறி குதித்து சென்று கல்லறைகளில் அஞ்சலி செலுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் கூறியதாவது:- ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநிலத் தகுதி அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் சூழலில், அங்கு அரங்கேறியுள்ள ஒரு சம்பவம் அங்கே எந்தளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதனை காட்டுவதாக அமைந்து இருக்கிறது.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வர் உமர் அப்துல்லா. இவர் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்த விரும்பினார் என்ற ஒரே காரணத்துக்காக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டு, சுவர் ஏறிக் குதிக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வரை இப்படித்தான் நடத்த வேண்டுமா?

இது ஏதோ ஒரு மாநிலம் அல்லது ஒரு தலைவரை பற்றியது மட்டும் என பார்க்க முடியாது. தமிழகம் தொடங்கி காஷ்மீர் வரை மத்திய பாஜகவின் மாநில அரசுகளின் உரிமைகளைத் திட்டமிட்டு பறிக்க நினைக்கிறது. இன்றைக்கு காஷ்மீரில் நடப்பது நாளை எங்கு வேண்டும் என்றாலும் நடக்கலாம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த தலைவருக்கும் நடக்கலாம். எனவே அனைத்து ஜனநாயகக் குரல்களும் இதனை ஓரணியில் கண்டித்தாக வேண்டும்.

படி படி என்கிற திராவிடத்தில் கிளை விட்டு விட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக் கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது திமுக மாணவர் அணி. எதிர்க்கட்சித் தலைவருக்கு அறநிலையத்துறை சட்டமும் தெரியவில்லை, கடந்தகால அதிமுக ஆட்சிகளிலும் கோவில் நிர்வாகங்கள் கல்வி நிறுவனங்களை நடத்தியதும் தெரியவில்லை.

ஆனால், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வி பெறுவதற்கு எதிராகவோ, அதனைக் கொச்சைப்படுத்தியோ பேசினால் ஓரணியில் தமிழ்நாடு உங்களை ஓட ஓட விரட்டும், எங்கள் திராவிடன் வலிமை கூட்டம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த 1931 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி காஷ்மீரில் மன்னராக இருந்த ஹரி சிங்கிற்கு எதிராக அங்குள்ள இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது மன்னரின் டோக்ரா ராணுவத்தினர் திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 22 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த ஜூலை 13ம் தேதி காஷ்மீர் தியாகிகள் தினமாக அங்கு அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அங்குள்ள பல்வேறு கட்சியினரும் சுட்டு கொல்லப்பட்ட 22 பேர் புதைக்கப்பட்ட கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்துவார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா நிர்வாகம் இதற்குத் தடை விதித்தது. மேலும் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் பலர், நேற்று வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது அமைச்சர்களுடன் தியாகிகள் கல்லறைக்குச் செல்வதற்காக தடுப்பு சுவரில் ஏறி குதித்து சென்றார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரரப்பை ஏற்படுத்தியது. சுவர் ஏறி குதித்து சென்று தியாகிகள் கல்லறையில் உமர் அப்துல்லா அஞ்சலி செலுத்தினார். இந்த நிலையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.