கன மழையால் உத்தரகண்டில் 15 பேர் உயிரிழப்பு.

17.09.2025 08:00:00

உத்தரகண்ட் முழுவதும் நேற்றிரவு (16) இடைவிடாத மழை பெய்ததால், உண்டான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளினால் மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர்.

டேராடூனில் மாத்திரம் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

செப்டம்பர் 20 ஆம் திகதி வரை பலத்த மழை பெய்யும் என்றும் வானில‍ை எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியுள்ளதுடன், டேராடூன், சம்பாவத் மற்றும் உதம் சிங் நகர் ஆகிய பகுதிகளுக்கு மாநில அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழையின் தாக்கம் டேராடூனில் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

அங்கு வீதிகள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன, வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்தன, இரண்டு பெரிய பாலங்கள் இடிந்து விழுந்தன, இதனால் முக்கிய வழித்தடங்களினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டன.

பெரிய அளவிலான மின் தடைகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சஹஸ்த்ரதாரா, முசோரி, பிரேம் நகர், நரேந்திர நகர் (தெஹ்ரி), பித்தோராகர், நைனிடால் மற்றும் பவுரி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 900க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயலாளர் வினோத் குமார் சுமன் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கனமழை பெய்யும் என்ற முன்னறிவிப்புகளுக்கு மத்தியில் பாதுகாப்பு காரணங்களுக்காக, டேராடூன் மாவட்டத்தில் தரம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.