உயிரிழப்பு 8 ஆக உயர்வு.. விபத்தின்போது பாலத்தில் பணியாற்றிய 4 பேரின் நிலை?

28.03.2024 14:41:48

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதி பாலம் உடைந்து விழுந்ததில், மேலும் 2 பேரின் உடல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே 2.5 கிமீ நீள பிரான்சிஸ் ஸ்காட் கீ எனும் இரும்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. துறைமுகத்தை இணைக்கும் இந்த பாலம் 4 வழி போக்குவரத்துடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணி அளவில் சிங்கப்பூர் நாட்டு கொடியுடன் வந்த சரக்கு கப்பல் ஒன்று எதிர்பாராத விதமாக பாலத்தின் ஒரு தூணில் மோதியது.

அடுத்த நிமிடமே பாலம் சீட்டு கட்டு போல் சரிந்து ஆற்றில் மூழ்கியது. சரக்கு கப்பலும் தீப்பிடித்தது. விபத்து நடந்த சமயத்தில் கன்டெய்னர் லாரிகள் உட்பட பல வாகனங்கள் பாலத்தில் சென்றதாக கூறப்படுகிறது.இதில் பல வாகனங்கள் பாலத்துடன் சேர்ந்து ஆற்றில் மூழ்கின. விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், மீட்புப் பணி தொடர்ந்து நடந்து வந்தது. இன்று காலை 25 கிமீ அடி ஆழத்தில் கனரக வாகனத்தில் இருந்து 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்து நேரிட்ட போது, பாலத்தில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 4 தொழிலாளர்களை தேடி வருகின்றனர். இடிபாடுகளையும் குப்பைகளையும் அகற்றும் பணி தொடர்ந்து வருகிறது. இந்த பாலம் 1977ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்படுவதாக பால்டிமோர் மேயர் பிராண்டன் கூறி உள்ளார்.