சிட்னி தாக்குதலின் பின்னணியில் தந்தையும் மகனும்.
|
சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த யூத கொண்டாட்டத்தில் 15 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் தந்தை மற்றும் மகன் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட 50 வயதுடைய தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் அவரது 24 வயது மகன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார்.
|
|
ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது யூத எதிர்ப்புத் தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட நாற்பது பேர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர், இதில் காவல்துறை அதிகாரிகளின் உடல்நிலை மோசமாக இருந்தாலும் ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்தனர். வெப்பம் மிகுதியான மாலைப் பொழுதில் மக்கள் நிறைந்திருந்த பிரபலமான கடற்கரையில் நடந்த தாக்குதலானது சுமார் 10 நிமிடங்கள் நீடித்ததாகவும், இதனால் நூற்றுக்கணக்கான மக்கள் மணலிலும் அருகிலுள்ள தெருக்களிலும் பூங்காக்களிலும் சிதறி ஓடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடற்கரையிலிருந்து ஒரு சிறிய பூங்காவில் நடைபெற்ற ஹனுக்கா நிகழ்வில் சுமார் 1,000 பேர் கலந்து கொண்டதாக பொலிசார் தெரிவித்தனர். தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எதுவென்று அதிகாரிகள் இதுவரை வெளிப்படுத்தாத நிலையில், சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காணொளியில், தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் போல்ட்-ஆக்சன் ரைபிள் மற்றும் ஷாட்கன் போன்றவற்றிலிருந்து சுடுவதாக உறுதி செய்யபப்ட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, மேலும் யூத சமூகங்களில் பொலிஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் திங்கள்கிழமை காலை போண்டி கடற்கரைக்குச் சென்று தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இந்த தாக்குதலை நமது தேசத்திற்கு ஒரு மோசமான தருணம் என்று அல்பானீஸ் குறிப்பிட்டிருந்தார். மேலும் காவல்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகள் தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கத்தை முழுமையாக ஆராய்ந்து வருவதாகக் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் தொடர்பு கொண்டதாகவும், அவர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் அல்பானீஸ் கூறினார். இதனிடையே, பாலஸ்தீன நாடு என்ற அந்தஸ்தை அவுஸ்திரேலியா ஆதரிப்பது யூத-விரோதத்தைத் தூண்டிவிடும் என்று அல்பானீஸை எச்சரித்ததாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், காஸா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் அட்டூழியங்கள் காரணமாகவே, வெளிநாடுகளில் வசிக்கும் அப்பாவி யூதர்கள் பழிவாங்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். |