அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இலங்கையர்

22.05.2022 09:40:10

இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

மேலும், சட்டவிரோத குடியேற்றங்கள் தொடர்பான அவுஸ்ரேலியாவின் கொள்கையில் மாற்றமில்லை எனவும் அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில், அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்படுபவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சொந்த நாட்டுக்கே அனுப்பி வைக்கப்படுவார்கள் என அவுஸ்ரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட படகு ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டுள்ளமையை தான் உறுதிப்படுத்துவதாக அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸன் அறிவித்துள்ளார்.

இன்று இடம்பெறும் அவுஸ்ரேலிய பொதுத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் இலங்கை அதிகாரிகளினால் கடந்த வாரம் படகொன்று தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் இரண்டாவது படகை தடுத்து நிறுத்தியுள்ளதாக அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.